/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடையில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
/
பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடையில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடையில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பாதாள சாக்கடை கழிவு நீர் ஓடையில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 22, 2025 11:23 PM
மேட்டுப்பாளையம், ; பாதாள சாக்கடை கழிவுநீரை, ஓடையில் விடுவதற்கு மோத்தேபாளையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 95 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நகரில் உள்ள, 33 வார்டுகளின் கழிவு நீரை, நேஷனல் நகர் அருகே உள்ள, நகராட்சி குப்பை கிடங்கில் கட்டியுள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, மின் மோட்டார் வாயிலாக பம்பிங் செய்யப்படுகிறது. அங்கு கழிவுநீரை சுத்தம் செய்த தண்ணீரை ஓடையில் திறந்து விடுகின்றனர். இந்த தண்ணீரால் விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் ஓடையில் தண்ணீர் கருப்பு நிறத்தில் வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து மோத்தேபாளையம் கிராமத்தில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், சிறுமுகை வனத்துறையினர், தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பவானி நதிநீர் பாசன விவசாய சங்க தலைவர் துரைசாமி பேசுகையில்,' பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை சுத்தம் செய்து, தண்ணீரை அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு விடுவதாக, முதலில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது கழிவுநீர் சுத்தம் செய்யாமலேயே, அருகே உள்ள ஓடையில் விடுகின்றனர். அந்த தண்ணீர் மோத்தேபாளையம், குத்தாரிபாளையம் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரால் இப்பகுதி கிணறுகளில் தண்ணீர் மாசடைந்ததோடு, பவானி ஆற்று தண்ணீரும் மாசடைந்து வருகிறது. எனவே ஓடையில் தண்ணீரை திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும்,' என்றார்.
பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் கூறுகையில்,' மின் தடை காரணமாக ஒரு நாள் சுத்தம் செய்யாத கழிவு நீர் ஓடையில் திறந்து விடப்பட்டது. இனி வரும் நாட்களில் சுத்தம் செய்த தண்ணீர் மட்டுமே ஓடையில் விடப்படும்,' என்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள், கிணறுகளின் தண்ணீரை பரிசோதனை செய்ய, மாதிரி எடுத்து சென்று உள்ளனர். தண்ணீர் மாசடைந்து உள்ளது என தெரிய வந்தால், சுற்று பகுதி உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, பாதாள சாக்கடை திட்ட தண்ணீரை ஓடையில் விடக்கூடாது என தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுக்க, கூட்டத்தில் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.