/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புலிவால் பிடித்த கதையாக திணறுகிறது மாநகராட்சி! இழுக்கிறது குழாய் பதிப்பு
/
புலிவால் பிடித்த கதையாக திணறுகிறது மாநகராட்சி! இழுக்கிறது குழாய் பதிப்பு
புலிவால் பிடித்த கதையாக திணறுகிறது மாநகராட்சி! இழுக்கிறது குழாய் பதிப்பு
புலிவால் பிடித்த கதையாக திணறுகிறது மாநகராட்சி! இழுக்கிறது குழாய் பதிப்பு
UPDATED : ஜன 07, 2026 09:52 AM
ADDED : ஜன 07, 2026 05:06 AM

கோவை :கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டுக்கு இணைப்பு குழாய் பதிக்க, லங்கா கார்னர் திருப்பத்தில், டிச. 27ல் ரோடு தோண்டப்பட்டது. மாநகராட்சி எதிர்பார்த்தது போல், அந்த வேலை அவ்வளவு எளிதாக முடியவில்லை. அதனால் பாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.
டிரில்லர் இயந்திரத்தால் ரோட்டில் துளையிட கூட முடியாமல் ஊழியர்கள் திணறினர். அந்தளவுக்கு திடமான கான்கிரீட் தளம் ரோட்டுக்கு கீழ் போடப்பட்டிருந்தது.
இதற்கு முன் மழை நீர் வடிந்து செல்ல போடப்பட்டிருந்த வடிகால் இருந்தது. அதை உடைத்து விட்டு, இரும்பு குழாய் பதித்து, அதன் மேற்பரப்பில் கான்கிரீட் பாக்ஸ் பதிக்கப்பட்டது.
பொக்லைன் இயந்திரத்தால் ரோட்டை தோண்டிய போது, டெலிபோன் ஒயர்கள் மற்றும் மின் புதை வடத்தை சேதப்படுத்தி விட்டனர். மற்றொரு புறத்தில் இருந்து சாக்கடை கழிவு நீர் வழிகிறது.
அவற்றை அகற்றி வேலையை தொடர்கிறது. கான்கிரீட் பாக்ஸ் ஒருபுறம் அமைத்து, அதன்மீது கான்கிரீட் தளம் போடப்பட்டிருக்கிறது. டெலிபோன் ஒயர்களை, அந்தந்த நிறுவனத்தினர் சீரமைத்து விட்டனர். அறுந்து கிடந்த மின் புதை வடத்துக்கு இணைப்பு கொடுக்கும் பணி நேற்று நடந்தது.
அருகாமையில் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்ல முடிவதில்லை. திருச்சி ரோட்டில் இருந்தும் ஸ்டேட் பாங்க் ரோட்டுக்கு வர முடிவதில்லை. பொதுமக்கள் சிரமத்துடன் ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
அடுத்த கட்டமாக, போக்குவரத்தை நிறுத்தி, ரோட்டின் அடுத்த பகுதியில் கான்கிரீட் பாக்ஸ் பதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வேலை முடிய இன்னும் ஒரு வாரமாகும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
ஆமை வேகத்தில் நடப்பதால், 10 நாட்களுக்கு மேலாகும் என தெரிகிறது. மக்களின் சிரமத்தை புரிந்து, பணியை வேகப்படுத்த வேண்டும்.

