/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இழு இழுவென இழுக்கும் தண்ணீர்பந்தல் பாலம்! 2006ல் திட்டமிட்டு நிலமெடுக்க முடியாமல் 2024 வரை இழுபறி
/
இழு இழுவென இழுக்கும் தண்ணீர்பந்தல் பாலம்! 2006ல் திட்டமிட்டு நிலமெடுக்க முடியாமல் 2024 வரை இழுபறி
இழு இழுவென இழுக்கும் தண்ணீர்பந்தல் பாலம்! 2006ல் திட்டமிட்டு நிலமெடுக்க முடியாமல் 2024 வரை இழுபறி
இழு இழுவென இழுக்கும் தண்ணீர்பந்தல் பாலம்! 2006ல் திட்டமிட்டு நிலமெடுக்க முடியாமல் 2024 வரை இழுபறி
ADDED : பிப் 08, 2024 06:46 AM

தண்ணீர்ப்பந்தல் ரோட்டில் பாலம் கட்ட முடியாத வகையில், அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும்ரோடுகளின் குறுக்கே, ரயில்வே இருப்புப்பாதைகள் செல்வதால், பல இடங்களில் ரயில்வே 'கேட்'கள் அமைக்கப்பட்டிருந்தன.
சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, நீலிக்கோணாம்பாளையம் மற்றும் பீளமேடு தண்ணீர்ப்பந்தல் ஆகிய மூன்று ரோடுகளிலும், அடுத்தடுத்து மூன்று ரயில்வே கேட்கள் (எண்கள்: 4, 5 மற்றும் 6) அமைந்துள்ளன.
வாகனங்களின் போக்குவரத்தைக் கணக்கிட்டு, இந்த மூன்று இடங்களிலும், மேம்பாலங்கள் கட்டுவதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டது.
அதிலும், தண்ணீர்ப்பந்தல் ரோட்டில் பாலம் (கடவு எண்: 6) கட்டும் திட்டம், 2006-2007 ரயில்வே திட்டத்திலேயே இடம் பெற்றது.
அதே ஆண்டிலேயே நெடுஞ்சாலைத்துறையால் அரசாணை (எண்:210 தேதி: 11-10-2006) வெளியிடப்பட்டு, ரூ.12 கோடியே 65 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.
இந்த பாலம், 549 மீட்டர் நீளத்தில், எட்டரை மீட்டர் அகலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.இதில், ரயில்வே இருப்புப்பாதையின் மீது கட்டப்படும் ரயில்வே பகுதி பாலம், கட்டி முடித்து, பல ஆண்டுகளாகி விட்டது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசி ரோடுள்ள திசையிலிருந்து 137 மீட்டர் நீளத்துக்கும், தண்ணீர்ப்பந்தல் பக்கத்தில் 68 மீட்டர் நீளத்துக்கும் அணுகுபாலங்கள் கட்டப்பட வேண்டும். இதற்கு அரை ஏக்கர் (18,682 சதுர அடி) தனியார் நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது.
மொத்தம் 58 நில உரிமையாளர்களிடமிருந்து, நிலம் கையகப்படுத்துவதற்கான பணி துவங்கியது. பெரும்பாலானவர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், ஐந்து நில உரிமையாளர்கள், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்தனர். இதில் சிலருக்கு ஐகோர்ட் அபராதமே விதித்தது.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் நடந்த அனைத்து வழக்குகளிலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், அரசுக்குச் சாதகமாக உத்தரவு வழங்கப்பட்டு, 2023 மார்ச் 3ல் எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதற்குப் பின்பு, கடந்த ஜூலை 21ல், நிலமெடுப்புக்கான 15 (2) நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே, ஜூன் 25ல் மற்றொரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல, அப்பகுதியிலுள்ள பள்ளியின் சார்பிலும் மற்றொரு மேல் முறையீட்டு மனு தாக்கலாகி, இரண்டும் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த நிலங்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கு, கடந்த 19ம் தேதியன்று, 10 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரத்து 445 ரூபாய், வருவாய்த்துறைக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த நவ, 28 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில், இருவரால் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக, அவிநாசி ரோட்டையொட்டி, தண்ணீர்ப்பந்தல் ரோட்டை விரிவாக்கம் செய்வதற்கு, இரு புறங்களிலும் ஒரே சீராக நிலமெடுக்க வேண்டுமென்று கோரி, ஓட்டல் நிர்வாகி ஒருவரால் மேலும் ஒரு வழக்கு, கடந்த டிச.,7ல், தாக்கலாகியுள்ளது.
இவ்வாறு வழக்குக்கு மேல் வழக்கு தாக்கலாகி வருவதால், தண்ணீர்ப்பந்தல் ரோடு பாலம், கானல் நீராகி வருகிறது. பணியை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை (ஊரகச்சாலைகள்) அதிகாரிகள், நொந்து நுாலாகி வருகின்றனர்.
சட்டரீதியாக இந்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு, தமிழக அரசு தனி முயற்சி எடுக்க வேண்டுமென்று, அப்பகுதியிலுள்ள பல லட்சம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இல்லாவிட்டால், இந்த பாலம் இப்போதல்ல; ஒரு நுாற்றாண்டு ஆனாலும் கட்டி முடிக்கப்பட வாய்ப்பேயில்லை!
-நமது நிருபர்-

