/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது
/
வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது
ADDED : அக் 23, 2025 11:48 PM

அன்னூர்: நான்கு நாட்களாக குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் களம் இறங்கியது.
கடந்த 18ம் தேதி நள்ளிரவில் அன்னூர் வட்டாரத்தில் இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது.
இதில் அன்னூர் சத்தி சாலையில் உள்ள பழனி கிருஷ்ணா அவென்யூ, புவனேஸ்வரி நகர் மற்றும் தோட்டங்களில் மழை நீர் புகுந்தது.
இதனால் பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலை நான்கு நாட்களாக நீடித்தது. இது குறித்து ஆர்.டி.ஓ., விடம் கடுமையாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டனர்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி செயற்பொறியாளர் ராஜா, மோப்பிரி பாளையம், எஸ்.எஸ்.குளம், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் ஊழியர்கள் பலர் களமிறக்கப்பட்டனர்.
ஏற்கனவே இயங்கி வந்த பத்து எச்.பி., டீசல் இன்ஜின் உடன், கூடுதலாக, 20 எச்.பி., மோட்டார் ஒன்று, ஐந்து எச்.பி., மோட்டார்கள் இரண்டு, 15 எச்.பி., மோட்டார்கள் என ஐந்து மோட்டார்கள் நிறுவப்பட்டன. இவை பழனி கிருஷ்ணா அவென்யூவை சுற்றிலும் நிலைநிறுத்தப்பட்டு தண்ணீரை வேகமாக வெளியேற்றின. அடுத்த மழைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாச பாளையம் சாலையை ஒட்டி வடிகால் வெட்டி தேவையான இடங்களில் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் 400 மீ., தூரம் வரை வாய்க்கால் வெட்டப்பட்டது. பதிப்பதற்காக குழாய்கள் கொண்டுவரப்பட்டன.
ஐந்து மோட்டார்கள் தொடர்ந்து இயங்கியதன் விளைவாக பழனி கிருஷ்ணா அவென்யூவில் பெரும்பாலான தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது.'
மழைநீர் செல்லும் பாதையில் நிலம் கையகப்படுத்துவதே நிரந்தர தீர்வாக இருக்கும்,' என ஒரு தரப்பினர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

