/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சியம்பாள் கோவிலில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம்
/
காமாட்சியம்பாள் கோவிலில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம்
ADDED : ஆக 06, 2025 12:00 AM

கோவை; ஆடி செவ்வாயான நேற்று, ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோவிலில், 'ஆயிரத்து எட்டு சுமங்கலிகள் பங்கேற்ற, 'கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம்' விமரிசையாக நடந்தது.
ஆடிவெள்ளியை போன்று, ஆடி செவ்வாயும் மிகவும் விசேஷமானது. இந்நாளில் காமாட்சிஅம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தால், லோக ஷேமம் ஏற்படுவதோடு அனைத்து சவுபாக்கியங்களும் அனைவருக்கும் கிடைக்கும்.
இந்த வைபவம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பரிபூர்ண அனுக்கிரஹத்தின் பேரில் நேற்று நடந்தது. ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திர மண்டலி கோவை மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி பக்த மண்டலி பெங்களூரு கீதா குழுவினர் பங்கேற்றனர்.
காமாட்சியம்மன் கோவில் மஹா மண்டபத்தில், காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை இக்குழுவை சேர்ந்த சுமங்கலிகள் ஐந்து பிரிவுகளாக, லலிதா சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனர்.
அப்போது காமாட்சி அம்பாளுக்கு குங்குமார்ச்சனையும், மலர் அர்ச்சனையும் நடந்தது. அம்பாளுக்கு மங்களப்பொருட்கள் சமர்ப்பித்து, சிறப்பு வழிபாடுகளும் நிறைவேற்றப்பட்டன.
அதே சமயம், காமாட்சியம்பாள் சன்னிதிக்கு முன்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹோமகுண்டத்தில், அம்பாளுக்கு உகந்த ஹோமங்களையும் சிவாச்சாரியார்கள் நிறைவேற்றினர். காலை துவங்கிய லலிதா சஹஸ்ரநாம பாராயண மஹா யக்ஞத்தில், திரளான பெண்கள் பங்கேற்று அம்பாளின் அருளை பெற்றனர். பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. கோவில் மண்டபத்தில் சுமங்கலிகள் நடத்திய, லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞ கோஷம் விண்ணை பிளந்தது.