/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்
/
அரசியல் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரம்
ADDED : மார் 17, 2024 11:28 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் அரசு விளம்பர சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவைகளை அகற்றும் பணியை உள்ளாட்சி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தலைவர்களின் போட்டோக்கள் அகற்றும் பணி தொடங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் உள்ளிட்டோர் போட்டோக்களை அரசு ஊழியர்கள் அகற்றினர்.
பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவச் சிலைகள் மறைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இதையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலை மறைக்கப்பட்டது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் உள்ள காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் துணி போர்த்தி மறைக்கப்பட்டன. பன்னீர்மடையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலையும் மறைக்கப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி பூச்சியூர் ரோட்டில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதே போல ஜோதி காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பான புகாரை உடனுக்குடன் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டது.
அன்னுார்
அன்னுாரில் நேற்று முன்தினமே பேரூராட்சி சார்பில், கொடிக்கம்பங்களை அகற்றிக் கொள்ளும்படி கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒரு சில கட்சியினர் மட்டும் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினர் கொடி கம்பங்களை அகற்றவில்லை.
இதையடுத்து, பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள், கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஓதிமலை ரோடு, தென்னம்பாளையம் ரோடு மற்றும் கோவை ரோடு பகுதிகளில் அரசியல் கட்சி போஸ்டர்களை அகற்றினர்.
பேரூராட்சி பகுதியில் சுவர்களில் கட்சி சின்னங்கள் வரைவதற்கு அனுமதி இல்லை. எனினும் பல இடங்களில் தி.மு.க., பா.ஜ., கட்சியினர் சின்னங்களை வரைந்து உள்ளனர். அவற்றை அழிக்கும்படி பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். எனினும் நேற்று மாலை வரை பேரூராட்சி பகுதியில் அரசியல் கட்சி சுவர் சின்னங்கள் அழிக்கப்படவில்லை.

