/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்டம் மறு சீரமைப்பு
/
குடிநீர் திட்டம் மறு சீரமைப்பு
ADDED : டிச 12, 2025 06:39 AM

பொள்ளாச்சி: ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் மறு சீரமைப்புக்காக, துருப்பிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில், 378 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் மறு சீரமைப்புக்கு, 51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கூட்டுக்குடிநீர் திட்டத்திலுள்ள கான்கிரீட் குழாய்களுக்கு மாற்றாக, வார்ப்பு இரும்பு குழாய்கள் மற்றும் புதிய மின் மோட்டார் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும், அதற்கான வார்ப்பு இரும்பு குழாய்கள், கனரக லாரிகளில் எடுத்துவரப்பட்டு, பொக்லைன் இயந்திரம் வாயிலாக குழி தோண்டி, நிலத்தினுள் அமைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் இருந்து வஞ்சியாபுரம் வழியாக நாட்டுக்கல்பாளையம் செல்லும் ரோட்டில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக அப்பகுதியில், குடியிருப்பு ரோடுகள் வழியாக, பிரதான ரோட்டிற்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்களுக்கு மாற்றாக, புதிய வார்ப்பு இரும்பு குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சாலையோரம், 1.60 மீ., ஆழத்தில் வார்ப்பு இரும்பு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நிறைவு பெற்றால், புதிய இணைப்புகளின் வழியே தண்ணீர் எடுத்துச் செல்லப்படும்.
பழைய குழாய்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. துருப்பிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய் பயன்படுத்துவதால், இனிவரும் நாட்களில் குழாய் உடைப்பு, நீர்க்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாது. தண்ணீர் விரயமாவது முழுவதுமாக தடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.

