/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.10 கோடியில் நீர் உந்து நிலையம் புதுப்பிப்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கிடைக்கும்
/
ரூ.1.10 கோடியில் நீர் உந்து நிலையம் புதுப்பிப்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கிடைக்கும்
ரூ.1.10 கோடியில் நீர் உந்து நிலையம் புதுப்பிப்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கிடைக்கும்
ரூ.1.10 கோடியில் நீர் உந்து நிலையம் புதுப்பிப்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கிடைக்கும்
ADDED : பிப் 16, 2024 12:44 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி நீர் உந்து நிலையத்தில், 1.10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நகரில், ஒரு நாள் விட்டு, ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90,124 மக்கள் தொகை உள்ளது.அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளைக்கு, 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.
மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 11 மில்லியன் லிட்டர் தினசரி வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, சராசரியாக 107 லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
தற்போது, நகரில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீர் உரிய முறையில் கிடைக்கவில்லையென புகார் எழுந்தது.
இந்நிலையில், நகரில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கும் வகையில், நீர் உந்து நிலையத்தில், 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில் தற்போதைய மக்கள் தொகை, ஒரு லட்சத்து, 22 ஆயிரம் பேர் இருக்கும் என கருதப்படுகிறது. மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கடந்த, 1996ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்ட நீர் உந்து நிலையம், நகராட்சி கட்டுப்பாட்டில், 1999ம் ஆண்டு வந்தது.
ஒரு டிரான்ஸ்பார்ம், மோட்டார் உள்ளிட்டவை அமைத்து நீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பின் பராமரிப்பு பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, 1.10 கோடி ரூபாய் செலவில், மூன்று மின்மோட்டார்கள், இரண்டு மின்மாற்றி பொருத்துதல், வால்வுகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இனி நகரில், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.