பஸ் ஸ்டாண்ட் போக பயமாக இருக்கு
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, 'நண்பா, நைட் நேரத்துல பஸ் ஸ்டாண்டுக்கு வரவே பயமாக இருக்குனு,' புது தகவலோட பேச துவங்கினார்.
பழைய பஸ் ஸ்டாண்டுல அதிகாலைல, 3:00 மணிக்கு ரெண்டு ஆண்கள், ரெண்டு பெண்கள் வர்றாங்க. பெண்கள் இருக்கற இடத்துல உட்கார்ந்துக்கிட்டு கெட்ட வார்த்தையில பேசுறாங்க. அவங்க, தினமும் இங்க வந்துடுறாங்க. பஸ் ஸ்டாண்டுல நைட்ல இருக்கறவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணுறாங்க. அப்பாவிகளா இருந்தா, அடித்து மிரட்டி, பணத்தை அபேஸ் பண்ணுறாங்க.
வெளியூர்ல இருந்து வந்து, பஸ்சுக்காக காத்திருந்து, அசந்து துாங்கறவங்க உடைைமகளை கூட துாக்கிட்டு போயிடுறாங்க. இவங்க யாருன்னு தெரியல. அடிக்கடி வர்றாங்க. போலீஸ் ரோந்து வந்தாலும் இதை பெரிசா எடுத்துக்கறது இல்ல.
இப்படியே போச்சுனா, பஸ் ஸ்டாண்டுக்கு நைட் நேரத்துல யாருமே தனியாக போக முடியாது. அதிகாலையில பெண்கள் யாராவது வெளியூர் போக காத்திருந்தா, என்ன பண்ணுவாங்கனு தெரியாது. காலம் கெட்டுக்கிடக்குது. புகார் செய்தாலும் போலீசாரும் கண்டுக்கறதில்லைனு, தகவலை சொன்னார்.
கிராம மக்கள் களமிறங்கிட்டாங்க
கணக்கம்பாளையம் ஊராட்சியில், பொது குடிநீர் குழாய் அருகே கூட்டமாகவும், தயக்கத்துடனும் நின்று கொண்டிருந்த மக்களிடம் விசாரித்த போது, தங்களின் போராத காலத்தை கொட்டி தீர்த்தனர்.
இந்த கட்சிக்காரங்க தங்களோட சுயநலத்துக்காக, மக்களைத்தான் பலிகடா ஆக்கறாங்க. எங்க ஊர்ல குடிநீர் வருதுனா, ஏதோ விருந்தாளிங்க வீட்டுக்கு வர்ற மாதிரி, 15 நாளுக்கு ஒருமுறை தான் வருது.
நகராட்சியோட எல்லையில இந்த ஊர் இருக்கு. நகரத்துல குடிநீர் பிரச்னை இல்லாம தான் இருக்கு. நகராட்சியோட இணைக்க பொதுமக்கள் நாங்க ஆர்வம் காட்டினாலும், கட்சிக்காரங்க அவங்க சுயநலத்துக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்கறாங்க.
அதுனால, நாங்களே களத்துல இறங்கிட்டோம். உடுமலை நகரத்தோட எங்க கிராம ஊராட்சியையும் இணைக்கணும்னு முதல்வருக்கு ஒரு மனு தயார் பண்ணிட்டு இருக்கோம்.
இத நேரடியாக செஞ்சா எங்களுக்கும் பாதுகாப்பு இல்லைங்கிறதால, ரகசியமாக ஊர் மக்கள் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருக்கோம். எங்களோட அடிப்படை தேவைய கேக்கிறதுக்கு கூட அச்சப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கோம்னு, சொன்னாங்க.
பாசன சபைகாரங்க என்ன பண்ணுறாங்க?
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை நோக்கி வரும் போது கெடிமேட்டில், வாகனத்தை ஓரங்கட்டினோம். அங்க, விவசாயிகள் இருவர், பிரதான கால்வாய் கரையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
ஏம்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் மெயின் வாய்க்கால்ல, தண்ணி நிறுத்துனாங்க. இன்னைக்கு மறுபடியும் தண்ணி போகுது. நம்ம கிளை வாய்க்கால்ல தண்ணி வருமா என்றார் ஒருவர்.
அதற்கு மற்றொருவர், இந்த தண்ணி நமக்கு கிடையாது. வட்டமலைக்கரைக்கு போகுது என்றதும்; மற்றவர், அது எங்கப்பா இருக்குது. இதுவரைக்கும், திருமூர்த்தி டேமுல இருந்து, அங்க தண்ணி திறந்ததா கேள்விப்பட்டதே இல்லையே. புது நடைமுறையா இருக்குது, என்றார்.
அட நீ வேற அந்த டேம் எங்க இருக்குதுன்னு எல்லாம் தெரியாது. அரசாங்கம் உத்தரவு போடுது; அதிகாரிங்க திறக்கறாங்கா. இதெல்லாம் நாம போய் கேக்க முடியுமா?.
அது சரி, நம்ம பாசன காலத்துல, நம்மூரு குளங்களுக்கு தண்ணி திறக்க இந்த அதிகாரிங்க எத்தனை கண்டிசன் போட்டாங்க. அப்புறம், நமக்காக பாசன சபைக்காரங்களாவது பேசுவாங்கன்னு பார்த்தேன். அவங்களும் வாயே திறக்கலையே.
உப்பாறுக்கு தண்ணி திறந்தா கூட எதிர்ப்பை காட்டுறவங்க. இப்ப ஏன் அமைதியா இருக்கறாங்கன்னா, அதுக்கு, பின்னாடி, திருப்பூர் மாவட்ட ஆளுங்கட்சி அமைச்சரின் பிரஷரா கூட இருக்கலாம். சரி மூனாவது மண்டலத்துல, என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம். இப்ப மேகம் கூடி வருது, மழை வர்றதுக்குள்ள நாம போய் நம்ம வேலையை பார்ப்போம், என்றபடி அவங்க கிளம்பினாங்க.
ரோடு பிரச்னைய கண்டுக்காத அதிகாரிக!
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, பஸ்சுக்காக காத்திருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அதுல ஒருத்தரு, நம்ம அண்ணா நகர்ல போன டிசம்பர் மாசம், ரோடு போட்டாங்களே, அத கவனிச்சியானு கேட்டாரு.
அதுக்கு இன்னொருத்தர், நல்லாதான் ரோடு போட்டு இருக்காங்கணு நெனைக்கறேன்னு சொன்னாரு. அதுக்கு அவர், அட போப்பா, நீ நெனைச்சுட்டே இரு. அங்க ரோடு சரியா போடுல. ரோட்டுல ஒரு பக்கத்துல சரிவாவும், இன்னொரு பக்கம் கடமைக்கும் போட்டிருக்காங்க.
பக்கத்து தெருவுல நல்லா இருந்த ரோடு மேலயே தார் ஊத்தி ரோடு போட்டாங்க. இத பத்தி அதிகாரிங்க கிட்ட கேட்டா, இது புது ஸ்கீம்னு பதில் சொல்றாங்க.
ரொம்ப ஒசரமா ரோடு போட்டதால, அங்கு இருந்தவங்க கேட்டை கூட திறக்க முடியல. தார் ரோட்டுல கேட்டு இடிச்சு நிற்குது. அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் பலர், கேட்டை மாத்திட்டாங்க. ஒரு சிலர் வீட்டு முன்னாடி இருந்த ரோட்டை இடிச்சு விட்டிருக்காங்க.
இதைப் பத்தி அங்கிருந்த மக்கள் கம்பிளைன்ட் பண்ணியிருக்காங்க. அதுக்கு அதிகாரிக, இன்னும் ஒரு வாரத்துல சரி செஞ்சு தர்றோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காங்க. ஆனா ரெண்டு வாரமாகியும் அதிகாரிக யாரையுமே இந்த பக்கம் வரல. இப்படி தான் நடக்குது வளர்ச்சி பணினு, புலம்பினர்.
பார்க்க புதுசு; உள்ளாற பழசு தான்!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பஸ் ஊழியர்களை சந்தித்தேன். என்னங்க புது பஸ் வந்திருக்கு, இந்த பஸ் எப்படி இருக்குனு விசாரித்தேன். அதை ஏனுங்க கேட்கறீங்கனு தலையில அடிச்சுக்கிட்டாங்க. அவங்க சொன்னதில் இருந்து...
கோவை கோட்ட, அரசு போக்குவரத்து கழகத்துல சமீப காலமாக, டி.என். 38 என் 3001 முதல், -3101 வரிசை கொண்ட அரசு பஸ்கள, மறு 'பாடி' கட்டி, புதிய பொலிவுல இயக்குறாங்க.
இந்த பஸ்கள்ல, நிறத்துல மட்டுமின்றி உட்கட்டமைப்பிலும் நிறைய மாற்றம் செய்திருக்காங்க. பேசஞ்சர் சீட், ஜன்னல், மற்றும் ரீடிங் விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு வடிவமைச்சிருக்காங்க.
முழுக்க முழுக்க புதுசா, பஸ் 'பாடி' கட்டியிருக்கறதால பளிச்னு இருக்கு. தனியார் பஸ்களுக்கு போட்டியா வடிவமைப்பும், தரமும் இருக்கு. இதுக்காக, ஒரு பஸ்சுக்கு, 15 முதல் 20 லட்சம் ரூபா வரைக்கு செலவு பண்ணியிருக்காங்க.
ஆனா, என்ன தான் பஸ்ச புதுசா மாத்தினாலும், வேகத்தை கூட்டவே முடியல. இன்ஜின் பிரேக் எல்லாம் பழசா தானே இருக்கு. பார்க்கறதுக்கு வெளியில சூப்பரா இருக்கு, ஆனா, உள்ளே இருக்கறது எல்லாமே பழசு தான். இத முதல்ல தெரிஞ்சுக்குங்கனு, சொன்னாங்க.
கோவில்ல ஆளும்கட்சி தலையீடு
வால்பாறையில ஆளும்கட்சியினர் தலையீடு இல்லாம எதுவுமே நடக்காது போலிருக்குனு, டீ கடையில் இளைஞர்கள் பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.
வால்பாறை நகராட்சியில கான்ராக்ட் ஒர்க் முதல், கமிஷன் பெறுவது வரை எல்லாமே ஆளும்கட்சியினர் தலையீடு கொடிகட்டி பறக்கு. இப்போ, கோவில் விஷயத்துலயும் அவங்க 'டார்ச்சர்' தாங்க முடியல.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்கற கோவில்கள்ல, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்காங்க. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில்ல, அறங்காவலர்களா மூனு பேரை, தேர்வு செய்து மேலிட ஒப்புதலுக்காக அதிகாரிக அனுப்பிட்டாங்க. ஆனா, ஆளும்கட்சிக்காரங்க, நாங்க சொல்ற ஆள தான் அறங்காவலர்களா போடணும்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க. அதனால, இன்னும் அறங்காவலர்கள் தேர்வு செய்தும் அறிவிக்க முடியாம அதிகாரிக தவிக்கறாங்க.
கோவில் விஷயத்துலயும், ஆளும்கட்சிக்காரங்கள் இப்படி அட்ராசிட்டி பண்ணுறாங்களே, இதெல்லாம், எங்க போய் முடியப்போகுதோனு, பேசிக்கிட்டாங்க.