ADDED : ஏப் 21, 2025 04:54 AM
அரசு மருத்துவமனையிலடாக்டரான ஆண் செவிலியர்
பொள்ளாச்சி அருகே, ஆனைமலைக்கு செய்தி சேகரிக்க போயிருந்தேன். அங்கு, டீக்கடையில் பல நாட்களுக்கு பின் நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, 'உனக்கு விஷயம் தெரியுமா; அரசு மருத்துவமனையில், மருத்துவர் போல ஆண் செவிலியர் நடந்துக்கறாருனு', ஒரு போட்டோவ காண்பித்தார். இது தான், இப்ப டிரண்ட் என பேச ஆரம்பித்தார்.
வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கு. இதனால, பணியில இருக்கற செவிலியர்களுக்கு பணிப்பளு அதிகரிச்சிருக்கு.
இந்த சூழ்நிலையில, மருத்துவமனையில இருக்கற ஆண் செவிலியரு ஒருத்தரு, மருத்துவர் மாதிரி வலம் வர்றாரு. பிரசவ வார்டுக்கு, டாக்டர் போல ஸ்டெத்தாஸ்கோப் அணிந்து போய், பிறந்த குழந்தையை பரிசோதிக்கறாரு. இந்த போட்டோ சமூகவலைதளத்துல வைரலாகி, டாக்டர்களுக்கே அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்காம்.
இதுல, ஏதாவது தப்பு நடந்தா யார் பொறுப்புனு தெரியல. ஊரு முழுக்க போலி டாக்டர்கள கைது பண்ணுறாங்க. அரசு மருத்துவமனையில செவிலியர் ஒருத்தரு டாக்டரா மாறியிருக்காரு. இதுக்கு என்ன பண்ணப்போறாங்கனு தெரியலனு, சொல்லி முடித்தார்.
டீக்கடையில் இருந்த 'டிவி'யில், சந்திரமுகி படத்தில் வரும், 'சரவணன் இருக்க பயமேன்' என்ற டயலாக்கை கேட்டுட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
அரசு நிதியில அலட்சிய பணிவழக்கு தொடர போறாங்க
குடிமங்கலம் நால் ரோடு பஸ் ஸ்டாப்பில், கிராமத்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் உரையாடலை நாமும் காது கொடுத்து கேட்டோம்.
குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கான்கிரீட் ரோடு அமைப்பதில் பல்வேறு குளறுபடி நடக்குது. தரமில்லைனு மக்கள் புகார் தெரிவிச்சாலும், ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிக எவ்வித நடவடிக்கையும் எடுக்கறதில்ல.
ரோடு போட்ட சில மாசத்திலேயே ரோட்டை சேதப்படுத்தறது அதிகரிச்சிருக்கு. பணிகள் நடக்கும் போது, மதிப்பீடு எவ்வளவு, டெண்டர் எடுத்தது யாருங்கற விபரமும் அறிவிப்பா வைக்கறது இல்ல. இதை அதிகாரிகளும் கண்காணிக்கறதில்ல.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பினாலும் நடவடிக்கை இல்லை. ஒன்றியத்துல இருக்கற, 23 ஊராட்சிகளிலும், இப்படி பல புகார்கள் இருக்கு. உப்பாற்றின் குறுக்கே தரமின்றி தடுப்பணை கட்டியது குறித்த புகார கிடப்புல போட்டிருக்காங்க. மழை காலத்திலும் இந்த தடுப்பணைல தண்ணீர் தேங்காத அளவுக்கு கட்டுமான பணிகள் செய்திருக்காங்க.
இதனால, சமூக ஆர்வலர்கள், ஒன்றிய பொறியியல் பிரிவின் அலட்சிய போக்கு குறித்த விபரங்களையும், வீணடிக்கப்பட்ட அரசு நிதி குறித்த தகவல்களையும் சேகரித்து, கோர்ட்டுல வழக்கு தொடர போறாங்கனு பேசிக்கிட்டாங்க.
தேங்காய் பணத்த எந்த கணக்குலஅதிகாரிக வரவு வைக்கறாங்க!
உடுமலை தளி ரோட்டில், பி.ஏ.பி., ஊழியர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
உடுமலை பி.ஏ.பி., அலுவலக வளாகத்துல, இ.இ., ஏ.இ., ஆபீஸ் மட்டுமின்றி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பும் இருக்கு. இவை கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். சரியான பராமரிப்பு இல்லாம, வளாகம் முழுவதும் புதர் மண்டியும், கழிவு நீர் தேங்கியும், கொசு தொல்லை அதிகமா இருக்கு.
ஆண்டு தோறும் ஒதுக்கற பராமரிப்பு நிதியில, அதிகாரிகளின் வீடுகள் மற்றும் சுற்றுப்புற வளாகம் மட்டும் பராமரிக்கறாங்க. 'சி' கிளாஸ் ஊழியர்கள் வீடுகள், சிமென்ட் மற்றும் ஓட்டு வீடுகளாக இருக்கு. எந்த பராமரிப்பும் இல்லாம சிதிலமடைஞ்சு கிடக்குது.
இந்த வளாகத்துல, 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் நாவல், மா, முருங்கை என பலன் தரும் மரங்கள் ஏராளமா இருக்கு. உள்ளே வசிக்கற ஊழியர்களே, நீர்வளத்துறைக்கு ஆண்டுக்கு, 750 ரூபா செலுத்தி, தேங்காய் பறித்துக்கொள்ளும் நடைமுறை இருந்தது.
ஆனா, கடந்த, 5 ஆண்டுகளாக, அதிகாரிகளே நேரடியாக தேங்காய் பறித்து விற்கறாங்க. இந்த வருமானம் எந்த கணக்கில் வரவு வைக்கறாங்கனு தெரியலனு, புலம்பினாங்க.
தேர்தலுக்கு ஆயத்தமான தி.மு.க.,மவுனம் காக்கும் அ.தி.மு.க.,
வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில், இளைஞர்கள் சிலர் அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
வால்பாறையில சட்டசபை தேர்தலுக்கான பணிய தி.மு.க.,காரங்க துவங்கிட்டாங்க. நலத்திட்ட உதவி வழங்கல், விளையாடு உபகரணங்கள், பரிசு வழங்கல் என, நிகழ்ச்சி நடத்தி மக்களை கவர்ந்துட்டு இருக்காங்க. இது தவிர, அடி மட்ட தொண்டர்கள 'கவனிப்பு' செய்திட்டு இருக்காங்க. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டோர சுவர்கள்ல இடம் பிடித்து, கட்சி விளம்பரம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திட்டு இருக்காங்க.
அவங்களுக்கு போட்டியா, அ.தி.மு.க.,காரங்களும், அவங்க ஆட்சி சாதனைகள குறிப்பிட்டு விளம்பரம் எழுதியிருக்காங்க. ஆனா, அ.தி.மு.க.,வுல கட்சிப்பணி செய்யறதுல சுணக்கமா இருக்காங்க.
இப்ப, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்திருக்கற நேரத்துல, எந்த மாதிரி ரியேக்ட் பண்ணணும்னு கட்சி தலைமை அறிவிக்காம இருக்கு. தனித்து செயல்படுவதா, தாமரை கட்சியை அரவணைச்சு செயல்படுவதானு தெரியாம, மவுனமா இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.
சம்மர் கேம்ப் நடத்தி சம்பாதிக்கறாங்கமைதானத்த சுத்தப்படுத்த தயங்குறாங்க
உடுமலை நேதாஜி மைதானத்துல நண்பரை சந்தித்தேன். 'இங்க, இத்தன பேரு வாக்கிங் போறாங்க, விளையாடுறாங்க. ஆனா, மைதானத்தை நாசப்படுத்தறாங்கனு,' பேச துவங்கினார்.
உடுமலை அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டுப்பாட்டுல, நேதாஜி மைதானம் இருக்கு. மொத்தம், 6.5 ஏக்கர் பரப்புல இந்த மைதானம் இருக்கு. பள்ளி வளாகத்திலேயே மைதான வசதி இருக்கறதால, ஸ்டூடண்ஸ் யாரும் நேதாஜி மைதானத்துக்கு விளையாட வர்றதில்ல.
அதனால, இந்த மைதானம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தறவங்களுக்கு வசதியா இருக்கு. இப்ப, ஸ்கூல்ல எக்ஜாம் முடிஞ்சு லீவ் விட்டாச்சு. அதனால, ஸ்கூல் ெஹச்.எம்., கிட்ட அனுமதி வாங்கிட்டு, சம்மர் கேம்ப் நடத்த துவங்கிட்டாங்க. அதனால, நடக்கக்கூட இடமில்லாத அளவுக்கு நேதாஜி மைதானம் பிஸியா இருக்கு.
ரெண்டு மாசத்துக்கு டோர்னமென்ட் நடத்தி செம வருமானம் பார்க்கறாங்க. ஆனா, மைதானத்தை மேம்படுத்த எந்த உதவியும் செய்யறதில்ல. மைதானத்தை அசுத்தம் தான் செய்யறாங்க. புகார் பண்ணினாலும் யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லை. இந்த மைதானத்த, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு கிட்ட ஒப்படைச்சா, அவங்களாவது ஏதாவது மேம்படுத்துவாங்க. ஏதாவது நல்லது நடந்தா சரினு, சொன்னார்.
ஆளும்கட்சி சங்கம் வசூல் அமோகம்கிடா விருந்து வைத்து அமர்க்களம்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் டிரைவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். 'சட்டசபையில் தான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சினு அரசியல் நடக்குது. ஆனா, உழைக்கும் வர்க்கத்திலும், அரசியல் புகுந்து விளையாடுதுனு,' புலம்பினார். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான பணி நேரம், ஓட்டுற பஸ் விபரம் குறித்து, ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களே ஒதுக்குறாங்க.
ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப, ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் அதிகாரம் பண்ணுறாங்க. இதுவரைக்கும், அவரவர் சார்ந்த கட்சி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்தாங்க. நல்ல நிலையில இருக்கற பஸ்களை இயக்க சொல்லுவாங்க. பணி பளுவை குறைச்சு கொடுப்பாங்க. நைட் டூட்டி தவிர்க்கப்படும்.
ஆனா, இதுவரை இல்லாத அளவுக்கு இப்ப, ஆளும்கட்சி தொழிற்சங்கத்துக்குகாரங்க, விருப்பத்துக்கு ஏற்ப பணி ஒதுக்க 'கவனிப்பு' கேட்கறாங்க. 'கரன்சி'ய காட்டினா, கேட்கற டூட்டி கிடைக்கும். எந்த வேலையும் செய்யாம இப்படி ஆளும்கட்சிகாரங்க இல்லீகலா சம்பாதிக்கறாங்க. அந்த பணத்துல, மாதம் ஒரு முறை தனியார் தோட்டத்துல கிடா விருந்து, சரக்கு பார்ட்டி வைத்து அசத்துறாங்க. ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களும் அதுல கலந்துக்கறாங்கனு, விஷயத்தை சொன்னார்.

