sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : ஏப் 28, 2025 04:14 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

19 வருஷமா காத்திருக்கும் கவுரவ விரிவுரையாளர்கள்


வால்பாறையில், பேக்கரியில் டீ குடித்த போது, இளைஞர்கள் இருவர், 'எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தான் சம்பள பிரச்னைனா, காலேஜ்ல விரிவுரையாளர்களும் சம்பள பிரச்னைனு போராடுறாங்க,' என, பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேசியதில் இருந்து...

வால்பாறையில, 2006ல் தி.மு.க., ஆட்சியில தான் கல்லுாரி திறக்கப்பட்டது. கல்லுாரியில பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கோர்ட் உத்தரவிட்டும் இது வரை நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க தமிழக அரசு இழுத்தடிக்குதாம்.

வருஷத்துக்கு, 11 மாசத்துக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கறாங்க. அதுவும், குறைவான தொகுப்பு ஊதியம் வாங்கி குடும்பம் நடத்த வேண்டியிருக்கு. வேறு வேலைக்கு போக முடியாம, 19 வருஷமா காத்திருக்காங்க.

தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த கல்லுாரி, இப்போ அரசு கல்லுாரியாக மாறிடுச்சு. ஆனா, கவுரவ விரிவுரையாளர்கள மட்டும் பணி நிரந்தரம் செய்யாமல், பேராசிரியர்களுக்கான அரசு நிர்ணயம் செய்துள்ள சம்பளம் வழங்காமல் அரசாங்கம் இழுத்தடிக்குதாம்.

முதல்வர் தான், இந்த பிரச்னையில தலையிட்டு தீர்வு காண வேண்டும்னு, விரிவாக கடிதமே அனுப்பியிருக்காங்க. அவங்க பிரச்னைக்கு எப்ப விடிவு கிடைக்குமோனு, பேசிக்கிட்டாங்க.

தொழில் பூங்கா வருமா, வராதா விபரம் தெரியாம தவிக்கறாங்க!


கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதியில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு மரத்தடியில் ரெண்டு விவசாயிகள் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன்.

சிப்காட் தொழில் பூங்கா வருமா, வராதானு பேச்ச ஆரம்பிச்சாங்க. இதுல, ஒரு சில விவசாயிகள் தங்கள் குடும்ப கல்யாணம், காதுகுத்து பங்சனுக்கு காசு இல்லைன்னு, இருக்க நிலத்தை விக்கிறதுக்கு தயாராயிட்டாங்க. சில விவசாயிகள் நிலத்தை விக்கிறதுக்கு, 'அட்வான்ஸ்' எல்லாம் வாங்கிட்டாங்க.

ஆனா, சிப்காட் தொழில் பூங்கா வரப்போகுதுனு செய்தி பரவியதும், அட்வான்ஸ் வாங்குனவங்க எல்லாரும், பணத்தை திருப்பி கொடுத்துட்டாங்க. இதனால விவசாயிகளுக்கு சங்கடமா போச்சு. இது மட்டுமா வீட்டு விசேஷத்தை கடன் வாங்கி நடத்த வேண்டிய நிலையில இருக்காங்க.

அரசாங்கமும், சிப்காட் வருமா, வராதானு தெளிவா சொல்ல மாட்டேங்குது. இதனால பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க.

லோன் கொடுக்குது அரசாங்கம் இடையில வசூலிக்கறாங்க லஞ்சம்


அரசாங்கம் அறிவிக்கிற திட்டம் எல்லாம், சாதாரண மக்களுக்கு கிடைக்காம பண்றவங்க இருக்கிற வரைக்கும், எந்த மாற்றமும் நடக்காதுனு, மூங்கில்தொழுவு பிரிவு பஸ் ஸ்டாப்பில் பெண்கள் வேதனையுடன் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உரையாடலில் இருந்து...

சுய உதவிக்குழுக்களுக்கு அரசாங்கம் எத்தனையோ திட்டங்கள அறிவிக்குது. கிராமத்துல இருக்குற பெண்களும் குழு அமைச்சு, பல கட்ட போராட்டத்துக்குப்பின், தொழில் நடத்த லோன் வாங்கற அளவுக்கு வந்திருக்காங்க.

ஆனா, அரசாங்கம் நிதி ஒதுக்கினாலும், தற்காலிக பணியில் இருக்கிற சிலரு, லோன் கிடைக்காம முட்டுக்கட்டை போடறாங்க.

குடிமங்கலம் ஒன்றியத்துல, சில பஞ்சாயத்துல, லோன் கிடைக்க, கூட்டமைப்பு நிர்வாகிகள் பலருக்கு 'கவனிப்பு' செய்ய வேண்டியிருக்கு. ஒவ்வொருத்தர் கிட்டயும், 15 ஆயிரம் ரூபா வரைக்கு கறாரா வசூல் நடக்குது. பணம் கொடுக்கலைனா, வங்கிக்கு சமர்ப்பிக்கிற சர்டிபிகேட்ட தர்றது இல்லை.

இதுக்கு பயந்துட்டு பல குழு பெண்கள், லோனே வேண்டாம்னு ஓட்டம் பிடிக்கறாங்க. இப்படி இருந்தா அரசாங்கத்துக்கு எப்படி நல்ல பேரு கிடைக்கும்; கிராம பெண்கள் வாழ்வாதாரம் எப்படி உயரும்னு தெரியல.

இத பத்தி, பல முறை புகார் மனு அனுப்பினாலும், நடவடிக்கை இல்லை. பெட்டிஷன் போடறவங்களா மறைமுகமாக மிரட்டறாங்கனு சொன்னாங்க.

வாகத்தொழுவுக்கு பஸ் வந்ததும், பேசிக்கிட்டு இருந்த பெண்கள் ஓடிப்போய் பஸ் ஏறினாங்க.

காம்பவுன்ட்ட இடிச்சு நிழற்கூரை மாணவர்கள் மேல இல்ல அக்கறை


குமரலிங்கத்தில் ஆளுங்கட்சி பிரமுகரால், பள்ளி பாதுகாப்பே கேள்விக்குறியாயிருக்குனு, மக்கள் புலம்பிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.

இங்கிருக்கற அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை இடிச்சு, பஸ் ஸ்டாப் நிழற்கூரை கட்டுறாங்க. இங்க ஏற்கனவே பல சமூக விரோத செயல்கள் நடக்குது. காலை, மாலை நேரங்களில், பெற்றோரே நேரடியாக போய், மாணவ, மாணவியரை அழைச்சுட்டு வரும் நிலைமை இருக்கு.

இப்ப, சுற்றுச்சுவரையும் இடித்து விட்டு, பள்ளி இடத்தில் நிழற்கூரை கட்டினா, யார் வேண்டுமானாலும் அங்கு வந்து அமரலாம். 'குடி'மகன்கள் அங்கேயே தஞ்சம் அடைஞ்சுட்டா, அவங்கள யாரு வெளியேற்றுவது. அருகிலேயே பள்ளி வகுப்பறை இருக்குது. மாணவியர் பாதுகாப்பு என்னாகும்னு, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் வரை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

நிழற்கூரை கட்ட ஆளுங்கட்சி முக்கிய மக்கள் பிரதிநிதிதான் காரணமாக இருக்கறதால, மாவட்ட நிர்வாகமும் மற்ற அதிகாரிகளும் கப்சிப்னு இருக்காங்க. ஆளுங்கட்சி பிரதிநிதிக்கு எதிரா, மாணவர்கள் நலனுக்காகவும் மக்களே போராட்டம் நடத்தணும் பேலிருக்குனு, சொன்னாங்க.

மயில் செத்து கிடக்குதுனு சொன்னா ரோட்டோரத்துல புதைக்க சொல்றாங்க


பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர், 'என்னப்பா வனத்துறையில இப்படி இருக்காங்க,' என பேச ஆரம்பித்தார். என்னாச்சுனு விசாரிச்சேன்.

ஆச்சிப்பட்டி அருகே, ஒக்கிலிபாளையத்துல சில வாரத்துக்கு முன், ரோட்டுல மயில் அடிபட்டு செத்து கிடந்திருக்கு. இத பார்த்து, பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிக்கு அவ்வழியா போனவங்க போன் பண்ணி 'மயில் செத்து கிடக்குது'னு தகவல் சொல்லி இருக்காங்க.

இதை கேட்ட அந்த அதிகாரி, 'இதுக்கெல்லாம் என்ன கூப்பிடுவீங்களா; நீங்களே ஓரமாக எடுத்து புதைச்சுட்டு, எனக்கு ஒரு போட்டோ மட்டும் அனுப்புங்கனு,' சொல்லியிருக்காரு.

தகவல் கொடுத்தவங்க அதிர்ந்து போய், மயில் செத்து கிடக்குதுனு சொல்லுறோம். அதிகாரி இப்படி அலட்சியமா பேசறாரே. இவங்கெல்லாம் எப்படி வனம் மேம்பாட்டுல கவனம் செலுத்தப்போறாங்கனு தெரியல.

முன்பெல்லாம், தகவல் சொன்னா அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆட்களை அனுப்புவாங்க. இப்ப, இருக்கற அதிகாரிக எதையும் கண்டுக்கறதில்லனு, சொன்னார்.

கோடை விடுமுறையில பயிற்சி ஆர்வம் காட்டாத மாணவர்கள்


பொள்ளாச்சியில் ஆசிரியர் நண்பர் ஒருவரை சந்தித்தேன். 'கோடை விடுமுறையில நடக்கற பயிற்சிக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாம இருக்காங்க,' என பேச ஆரம்பித்தார். என்ன, விஷயம்னு விசாரித்தேன்.

பள்ளிக்கல்வித்துறை வாயிலா, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மே மாசம் 'கேரியர் கைடன்ஸ்' என்ற பெயரில், உயர் கல்வி பயில்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்போறாங்க.

கோடை விடுமுறையில, ஒன்றிய அளவில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புல, பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் இல்லாம இருக்காங்க. எல்லா ஸ்டூடண்ஸ் கிட்டவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுபற்றி பேசிக்கிட்டு இருக்காங்க.

ஏற்கனவே 'நீட்', 'ஜே.இ.இ.,' உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் துவங்கினாங்க. ஆனா, முறையா நடத்தப்படாத நிலையில, இந்த வகுப்பு தேவையானு தெரியல. மாணவர்கள பயிற்சிக்கு வரவழைச்சு, என்ன படிக்கலாம்னு சொல்லி, தனியார் கல்லூரிகள நோக்கி செல்லும் வகையில இந்த பயிற்சி வகுப்பை நடத்த போறாங்கனு, சொன்னார்.

ஓய்வு பெற்றவருக்கு சர்க்கரை ஆலையில என்ன வேலை?

உடுமலை கோட்டாசியர் அலுவலகத்துக்கு வந்திருந்த கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலையில என்னமோ நடக்குதுனு புலம்பிட்டு இருந்தாங்க. என்னனு விசாரிச்சேன்.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைய நவீனப்படுத்த, 100 கோடி ரூபாய்க்கு, திட்டமதிப்பீடு தயாரிச்சு அரசுக்கு அனுப்பினாங்க. நிதி ஒதுக்காததால், பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆலை மூடப்பட்டிருக்கு.ஒன்றரை ஆண்டுக்கு முன், மூடப்பட்ட ஆலையில தொழிலாளர் நல அலுவலரா பொறுப்பேற்றவர், நிர்வாகம், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு முறைகேடு பண்ணினாரு.போன மாசம் ஓய்வு பெற்று, பணிப்பலன்கள முழுசா வாங்கின அவருக்கு, மீண்டும் ஆலை நிர்வாகத்தால் பணி வழங்கியிருக்காங்க. நுாற்றுக்கணக்கான அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் நலிவடைந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு முறையாக பணிப்பலன்கள் வழங்காத நிலையில, இவருக்கு மட்டும் ஏராளமான சலுகை கொடுத்து, ஆலை விருந்தினர் இல்லத்திலேயே தங்குவதற்கு அனுமதியும் கொடுத்திருக்காங்க.விவசாயிகள், தொழிலாளர்களை இழிவாக பேசியும், நிதி நிலை மோசமாக இருக்கற நிலையிலும், நிதியை முறைகேடாக எடுத்தது, ஆலை வாகனத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவதுனு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கு.அப்படி இருந்தும், மீண்டும் அவருக்கு பணி வழங்கியதை எதிர்த்து, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பிலும், விவசாய சங்கங்களின் சார்பிலும், புகார் கொடுத்தும் ஆலை நிர்வாகமும், அரசு துறை அதிகாரிகளும் கண்டுக்கல.ஆலையை மறுபடியும் இயக்க முயற்சிக்காம, இந்த மாதிரி கரப்ஷன் ஆபீசர்களுக்கு வேலை கொடுத்திருக்காங்கனு புலம்பினாங்க.








      Dinamalar
      Follow us