ADDED : ஜூலை 27, 2025 09:02 PM
தள்ளுவண்டி கடையில வசூல் டுபாக்கூர் ஆசாமிகள் அட்ராசிட்டி ஆழியாறுக்கு 'டூர்' போயிட்டு வந்த நண்பரை சந்தித்தேன். 'ஆழியாறுல தள்ளுவண்டி கடைகள போட்டோ எடுத்து அடாவடி வசூல் பண்ணுறாங்கனு,' புது தகவலை சொன்னார்.
ஆழியாறு அணை மற்றும் பூங்காவும், 'வீக் எண்டு டேஸ்', கவர்மென்ட் லீவு நாள், பண்டிகை நாட்கள்ல, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வர்றாங்க. இவர்கள மையப்படுத்தி, ஆழியாறு அணையின் முன்பாக, வால்பாறை ரோட்டோரம் அதிகப்படியான தள்ளுவண்டி கடைகள் போட்டிருக்காங்க. பேன்சி கடை, நொறுக்குத்தீனி, பழங்கள், மீன் வறுவல் என, பல கடைகள் இருக்கு.
இதுனால, ரோட்டோரத்துல வாகனத்த நிறுத்த முடியாம, சுற்றுலா பயணியர் தவிக்கறாங்க. இந்த நிலைமையில, பத்திரிகை நிருபர்னு சொல்லிட்டு, சில டுபாக்கூர் ஆசாமிகள் தள்ளுவண்டி கடைகள மொபைல்போன்ல போட்டோ எடுத்து, தினமும், ஐம்பது, நுாறுனு வசூல் பண்ணுறாங்க. இதுமட்டுமில்லாம, கனிமவளங்கள் கொண்டு போகற லாரிகள நிறுத்தி, பணம் வசூலிக்கறாங்க. அந்த மாதிரியான, டுபாக்கூர் ஆசாமிகள போலீசார் கண்டுபிடித்து கைது செய்யணும்னு, சொன்னார்.
மின்வாரியத்துக்கு 'ஷாக்' கொடுத்தகில்லாடி கும்பல பிடிப்பாங்களா? பெதப்பம்பட்டி சந்திப்பில் விவசாயிகள் சிலர், ஆதங்கமாக பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு அவங்க கிட்ட விசாரிச்சேன்.
கொங்கல் நகரம், புதுப்பாளையம், விருகல்பட்டி, வல்லக்குண்டாபுரம், அடி வள்ளி உள்ளிட்ட கிராமத்துல, தென்னந்தோப்புக்குள்ள புகுந்து, கேபிள் வயர திருடுறாங்க. கிணறு மற்றும் போர்வெல் மோட்டார் கேபிளுக்கு விலை அதிகம் கிடைக்கறதால, அவற்றையெல்லாம் வெட்டி திருடிட்டு போறாங்க.
இதுவரைக்கும், பல லட்சம் ரூபா மதிப்புள்ள கேபிள் திருட்டு போயிருக்கு. இத பத்தி, குடிமங்கலம் போலீஸ்ல புகார் கொடுத்தாலும், போலீசார் நடவடிக்கை எடுக்கறதில்ல.
இந்த திருட்ட கண்டுபிடிக்க, பல விவசாயிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்காங்க. ராத்திரில ரோந்து போறாங்க.
இப்ப என்னடானா, புது விதமாக அப்பகுதியில் இருக்கற மின்வாரிய டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில், காயில் எல்லாத்தையும் மர்ம கும்பல் திருடியிருக்கு. இதுனால, மின்வாரியத்தினரே அதிர்ச்சியில இருக்காங்க. அந்த டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணிக்கு விவசாயிகளும் செலவு பண்ணினோம்.
இந்த புகாருக்காவது குடிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செஞ்சா தான், விவசாயிகளோட கஷ்டம் தீரும்னு, சொன்னாங்க.
வருவாய் துறைக்கு போக்குகாட்டும்ஹிந்து சமய அறநிலையத்துறை கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே, போன வாரம் நடந்த முகாமுக்கு நண்பருடன் சென்றிருந்தேன். அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இருவர் ஏதோ முனுமுனுத்துகிட்டு இருந்தாங்க. என்னன்னு விசாரிச்சேன்.
நம்ம ஊரு பொன்மலை வேலாயுத சுவாமி அடிவாரத்துல உள்ள இடம் வருவாய்த்துறையோடது. 40 வருடத்துக்கு முன்னாடி இங்க பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு கல்யாண மண்டபம் கட்டலாமுனு கோவில் நிர்வாகத்துக்கு தற்காலிக அனுமதியோட, 55 சென்ட் நிலத்த கொடுத்தாங்க.
ஆனா, அந்த நிலத்திலும் கல்யாண மண்டபம் கட்டல. அதுக்கு பதிலா கோயில் அடிவாரத்தில் ஒரு பகுதியில மண்டபமும், ஒரு பகுதியில கடைகளும் கட்டினாங்க. இது மட்டுமா வருவாய்த்துறை அனுமதியே இல்லாம, இல்லீகளா கோவில் அடிவாரத்தில் டூவீலர் ஸ்டாண்டையும் அமைச்சாங்க.
போகப்போக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில ரோட்டோரத்தில் இருக்கும் கடை, டூவீலர் ஸ்டாண்ட் எல்லாத்தையும் ஏலம் விட ஆரம்பிச்சாங்க. இதனால, பல வருஷமா பல கோடி ரூபாய் வருமானத்தை அறநிலையத்துறை அதிகாரிக பார்த்துட்டாங்க. இப்ப, அந்த இடத்தை வருவாய்த்துறையினர் திரும்ப கேட்டால், ஒப்படைக்க யோசிக்கிறாங்கனு, உண்மைய போட்டு உடைச்சாங்க.
தி.மு.க., கோஷ்டி சண்டையிலபிளக்ஸ் பேனர் எல்லாம் கிழியுது உடுமலை பஸ் ஸ்டாண்டுல, ஆளும்கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அவங்களுடன் நடந்த பேசியதில் இருந்து...
உடுமலையில கடந்த வாரம், அரசு விழாவுல முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதா இருந்தது. இதற்கான ஏற்பாடுகள்ல, அரசு துறை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் தீவிரமாக இருந்தாங்க.
முதல்வரை வரவேற்க பிளக்ஸ் வைப்பதில், கோஷ்டிகளுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டது. குடிமங்கலம் பகுதியில், தலைமை செயற்குழு உறுப்பினர் வைத்த பேனரை, மாவட்ட முக்கிய பிரமுகர் கொடுத்த தைரியத்துல, அவருடைய படத்த மட்டும் கிழிச்சுட்டாங்க.
ஒரு சில நாட்களில், மாவட்ட புள்ளிக்கு ஆதரவான ஒன்றிய செயலாளர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களில், அவருடைய முகத்த மட்டும் கிழிச்சுட்டாங்க. இவ்வாறு, பல இடங்களில் கோஷ்டி மோதல் காரணமாக, முதல்வர் வருகைக்காக வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள கிழித்து, கட்சியினர் விளையாடிட்டு இருக்காங்க.
உங்களுடன் ஸ்டாலின்னு, எத்தனை நிகழ்ச்சி நடத்தினாலும், கட்சிக்குள்ளாற இருக்கற கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலைனா, தேர்தல் நேரத்துலையும் இப்படியே குடுமிப்பிடி சண்டை போட்டுட்டு இருப்பாங்க. கட்சி மேலிடத்துல இருந்து, கடை மட்டம் வரைக்கு இப்படி தான் கோஷ்டி சண்டை நடக்குதுனு, புலம்பி தீர்த்தனர்.
விதிமீறி சரக்கு வாகனத்துல பயணம்நடவடிக்கை இல்லாததால தைரியம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில், நண்பரை சந்தித்தேன். அவர், 'விபத்து நடந்தாலும் கண்டுக்க மாட்டீங்குறாங்க,' என பேச ஆரம்பித்தார்.
நம்ம ஊருல, சரக்கு வாகனத்துல விதிமுறை மீறி ஆட்களை அழைச்சுட்டு போறாங்க. இதை கட்டுப்படுத்த எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கறதில்ல. ஆழியாறு, நவமலையில இருந்து, பழங்குடியின மக்கள, நெகமம் காட்டம்பட்டி பி.ஏ.பி., வேலைக்கு சரக்கு வாகனத்துல அழைத்துச்சுட்டு போயிருக்காங்க. இதை ஆரம்பத்திலேயே யாரும் கண்டுக்கல.
சரக்கு வாகனம் கவிழ்ந்து, விபத்துல உயிரிழப்பு ஏற்பட்டது. பலர் காயமடைஞ்சாங்க. அன்றாட வேலைக்கு போன தான், அவங்க குடும்பத்துக்கு வருமானம் கிடைக்கும். இப்ப விபத்து ஏற்பட்டு வீட்டுல இருக்காங்க.
இனியாவது, இந்த மாதிரி விதிமீறி சரக்கு வாகனங்கள்ல மக்கள அழைச்சுட்டு போகறத கட்டுப்படுத்தணும். மாவட்ட கலெக்டரும் வழக்கம் போல விதிமீறி மக்கள அழைச்சுட்டு போனா, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள அறிவுறுத்தினாரு. ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்ல. வழக்கம் போல சரக்கு வாகனத்துல ஆட்களை அழைச்சுட்டு போறாங்க. ரோட்டுல நிற்கற போலீஸ்காரங்களும் இத பார்த்துட்டு தான் இருக்காங்கனு, ஆதங்கத்தை கொட்டினார்.
கமிஷன், கரப்ஷன், கலெக்
ஷன்... கவுன்சிலர்கள் கிடுக்கிபிடி!
வால்பாறை டீ கடையில், இரண்டு இளைஞர்கள், 'நகராட்சியில என்னமோ கூத்து நடக்குதப்பா,' என பேசிக்கொண்டிருந்தனர். அவங்க உரையாடலை கவனித்தேன். நகராட்சியில இருக்கற 21 வார்டுகளில, 19 இடத்துல தி.மு.க.,காரங்க தான் இருக்காங்க. தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தான் தலைவராகவும், துணைத்தலைவராகவும் இருக்காங்க. சமீப காலமாக, வளர்ச்சிப்பணிகள் முறையாக நடக்கறதில்ல, வளர்ச்சிப்பணிங்கற பேருல பல கோடி ஊழல் நடந்திருக்குனு, கவுன்சிலர்கள் வரவு, செலவு கணக்கு தரக்கோரி மூன்று முறை மன்றக்கூட்டத்தை நடத்தவிடாமல், போராட்டத்தில் ஈடுபட்டாங்க. தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால், ஆறு மாசமா வார்டுகளில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கல. கவுன்சிலர்களுக்கு சேர வேண்டிய கமிஷனர் தொகைய கரெக்டா கொடுக்காம இழுத்தடிக்கறாங்களாம். கமிஷன் தொகைய நகராட்சியில உயர் பதவியில இருக்கறவங்களோட கணவரும், ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகியும் அமுக்கிட்டாங்கனு, கவுன்சிலர்களே வெளிப்படையா சொல்லுறாங்க. இதனால, தலைவரை பதவி நீக்கம் செய்யணும்னு, அமைச்சரிடமே கவுன்சிலர்கள் புகார் பண்ணிட்டாங்க. ஆனாலும் ஒன்னுமே நடக்கல. அதனால, அடுத்த மாசம் 7ம் தேதி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, 14 கவுன்சிலர்கள் முடிவு பண்ணியிருக்காங்க, அதற்கான அறிவிப்பை கமிஷனர் வெளியிட்டிருக்காரு. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வராம தடுக்க தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர் சமாதானம் பேசிட்டு இருக்காரு. நம்ம வால்பாறைக்கு எப்ப விடியல் பிறக்கும்னு தெரியலைனு பேசிக்கிட்டாங்க.