
ஆத்துல கொட்டுறாங்க கழிவு
கண்காணிப்பில் இல்ல கவனம் பொள்ளாச்சி அருகே ஆழியாறில் நண்பரை சந்தித்துபேசிக் கொண்டு இருந்தேன். 'ஆற்றில் அட்ராசிட்டி பண்ணுறாங்க, இதுக்கு தீர்வு கிடையாதா,' என, பேச ஆரம்பித்தார். என்ன விஷயம்னு கேட்டேன்.
ஆழியாறு அணையில இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், பாசனத்துக்கும் கைகொடுக்குது. பல கிராமங்கள், நகரங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கு. அதனால, ஆற்றுல போகும் தண்ணீரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கு.
ஆனா, ஒரு சிலர் மீன் இறைச்சி கழிவுகள ஆற்று நீரில் வீசறாங்க. ராத்திரி நேரத்துல, வாகனங்கள்ல கொண்டு வந்து இறைச்சி கழிவை ஆற்று நீரிலும், ஆற்றோரத்திலும் வீசுறாங்க. இது பற்றி புகார் சொன்னாலும் எந்த நடவடிக்கையும் இல்ல.
கொட்டுறவங்க கிட்ட, ஏன் இப்படி பண்ணுறீங்கனு கேட்டா, வாக்குவாதம் பண்ணுறாங்க. இத தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு செய்யணும். மக்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் நீர் ஆதாரமாக உள்ள ஆற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கணும்.
இறைச்சி கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதித்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கணும். அப்ப தான், தப்பு செய்யறவங்களுக்கு பயம் ஏற்படும்னு, சொன்னார்.
தேர்தல்ல வேலை செய்யலைனா கட்சி பதவி பறிபோயிடுமுங்க!
வால்பாறைக்கு வந்த மாஜி அமைச்சர், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு 'டோஸ்' விட்டிருக்காருனு, பஸ் ஸ்டாண்டில் கட்சி பிரமுகர்கள் பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க அவங்க உரையாடலை கவனித்தேன்.
வால்பாறையில நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்துல, மாஜி அமைச்சர் வேலுமணி கலந்துக்கிட்டாரு. அவரு பேசும்போது, வரும், 2026 சட்டசபை தேர்தல் மொதல்ல மாதிரி இருக்காது. நாம ஜெயிக்க ரொம்பவே போராட வேண்டியிருக்கும். வால்பாறை மலைப்பகுதியில இந்த முறை தி.மு.க.,வை விட கூடுதலா ஓட்டு வாங்கணும்.
அதுக்காக கட்சிக்காரங்க இப்ப இருந்தே தேர்தல் பணிய துவங்கணும். இளம் வாக்காளர்கள நம்ம பக்கம் இழுக்கணும். எலெக்சன் நேரத்துல மட்டும் வாக்காளர்கள சந்திச்சா போதாது. இப்பவே அவங்கள சந்தித்து குறைகளை கேட்டு தெரிஞ்சுக்கணும். தேர்தல்ல ஜெயிச்சதும் குறைகள சரிசெய்து கொடுக்க உறுதி கொடுக்கணும்.
தேர்தல்ல கட்சி நிர்வாகிகள் கோஷ்டி பூசலை மறந்து பம்பரமா வேலை செய்யணும். இல்லைனா, கட்சி பதவி பறிபோயிடும். மூத்த நிர்வாகிகள் பூத் கமிட்டியினரை அரவணைத்து போகணும். தேர்தல்ல அதிக ஓட்டு வாங்கி தரும் பூத் கமிட்டிக்கு நிச்சயமாக 'கோல்டு காயின்' உண்டுனு பேசியிருக்காரு. இதனால, நம்ம கட்சிக்காரங்க குஷியாயிட்டாங்கனு, பேசிக்கிட்டாங்க.
பணிமனையில என்ன செய்யறாங்கஅடிக்கடி நடுவழியில நிற்குது பஸ்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ஓய்வு பெற்ற, போக்குவரத்து கழக ஊழியர் ஒருவருடன் பேசிக்கொண்டேருந்த போது, ஊழியர்கள் புகார் எழுதி வச்சாலும் பணிமனையில என்ன பண்ணுறாங்கனே தெரியலைனு, பேச ஆரம்பித்தார். அவர் கூறியதில் இருந்து...
பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் இருந்து, டி.என். 38 என் 3386 என்ற எண்ணுள்ள பஸ், பொள்ளாச்சி - கோவை வழித்தடத்துல இயங்குது. இந்த பஸ் பழுது காரணமாக, அடிக்கடி வழித்தடத்துல நிற்குது.
பல நாட்களாக, இப்பிரச்னை இருந்தும், சரிவர பழுது நீக்கம் செய்யாம வழித்தடத்துல இயக்குறாங்க. பஸ்ல இருக்கற பிரச்னைய ஊழியர்கள் எழுதி வச்சாலும், பணிமனையில அலட்சியமா இருக்காங்க. பழுதை சரிபண்ணுறதில்ல.
போன, 21ம் தேதி, சுந்தராபுரம் சிட்கோ பக்கத்துல அந்த பஸ் நடுரோட்டுல பழுதாகி நின்னுருச்சு. ரோட்டுல போகற பஸ் டிரைவர்கள், பயணியர் எல்லாரும் பஸ் ஊழியர்கள திட்டியிருக்காங்க. பஸ்சில, பிரச்னை இருக்கறது தெரிஞ்சும் எதுக்கு ரோட்டுக்கு ஓட்டிட்டு வர்றீங்கனு கடும் வாக்குவாதம் பண்ணியிருக்காங்க. இந்த பிரச்னைக்கு தீர்வே இல்லாம பேயிட்டு இருக்குனு, ஆதங்கப்பட்டாரு.
பட்டா கொடுத்ததுல குளறுபடி'கரன்சி' செலவிட்டவங்க கண்ணீர்
குடிமங்கலம் நாலு ரோடு சந்திப்புல, பட்டாவும் கையுமா நின்னுட்டு இருந்த மக்களிடம் என்ன பிரச்னைக்கு வந்திருக்கீங்கனு விசாரிச்சது தன் தாமதம். எங்க பிரச்னைய கேளுங்கனு பேச ஆரம்பித்தனர்.
குடிமங்கலம், பெதப்பம்பட்டி, வருவாய் உள்வட்ட கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு, சமீபத்துல இலவச வீட்டு மனை பட்டா வழங்கினாங்க. இதுக்காக, பயனாளிக கிட்ட கணிசமான தொகைய வசூல் பண்ணியிருக்காங்க.
பயனாளிகள் தேர்விலும் பல்வேறு குளறுபடி நடந்திருக்கு. வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும், புரோக்கர்களும் கைகோர்த்து இந்த வசூல்ல ஈடுபட்டிருக்காங்க. பணம் கொடுத்தவங்களுக்கு பட்டா கிடைச்சதால பயனாளிக நிம்மதியா இருந்தாங்க.
ஆனா, பட்டாவுக்கான இடத்த இன்னமும் அளவீடு செய்து தரல. இதனால, வீடு கட்டுவது உள்ளிட்ட எந்த வேலையும் செய்ய முடியாது. இடத்தை அளவீடு செய்து கொடுக்க, எவ்வளவு லஞ்சம் கேட்பாங்களோனு பயனாளிக கவலையில இருக்காங்க.
கிராம பகுதியில இப்படி எத்தனை குளறுபடி நடந்தாலும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், உடுமலை தாலுகா அதிகாரிகளும் எதையும் கண்டுக்கறதில்ல.
இந்த குளறுபடிகள பட்டியலிட்டு, முதல்வருக்கு மனு அனுப்ப, சமூக ஆர்வலர்கள் விபரங்கள சேகரிச்சுட்டு இருக்காங்க. இத்தனை பேருக்கு பட்டா வழங்கியிருக்கோம்னு பெருமையா முதல்வர் பேசினாலும், பட்டா வழங்கும் திட்டத்தோட பின்னணியில இருப்பது மக்களோட வேதனை மட்டுமே இருக்குனு, சொன்னாங்க.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமுக்கு போக்குவரத்து துறைய காணோம்!
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஒவ்வொரு பகுதியா, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்குது. இதுல ஒரு முகாமுக்கு நண்பர் போய்ட்டு வந்தார். அவர்கிட்ட முகாம் எப்படி நடக்குதுன்னு கேட்டேன். அதெல்லாம் நல்லாத்தா நடக்குது. பல துறைகள் வந்திருந்தாலும், போக்குவரத்து துறை மட்டும் வரல.
ஏன்னு கேட்டா, முகாமுல இருக்க அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகளும் வந்திருக்கணும். ஆனா ஏனோ இன்னும் வரல, தெரியலைனு மழுப்பலா பதில் சொல்றாங்க. ஒவ்வொரு முகாமிலும் இதே மாதிரி தான் பதில் சொல்லிட்டு இருக்காங்க.
கிணத்துக்கடவுல, சில பஸ்கள் பாலத்திலேயே போகுது. பஸ் ஸ்டாண்டுக்கு எல்லா பஸ்களும் வர்றதில்ல. பெரும்பாலான தனியார் பஸ்ல, கிணத்துக்கடவு பயணிகள உட்கார அனுமதிக்கறதில்ல. கிராமங்களுக்கு முறையா பஸ் இயக்குவதில்ல. இப்படி ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. போக்குவரத்து துறை அதிகாரிக வந்தா தானே, இந்த பிரச்னைக்கு மனு கொடுத்து தீர்வு காண முடியும்.
இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கவனிச்சு, எல்லா துறை அதிகாரிகளும் முகாமுக்கு வரணும்னு உத்தரவு போடணும், என்றார்.
எல்லாம் ஒரே நேரத்துல நடக்கு எதுல கவனம் செலுத்துவாங்க
உடுமலையில எல்லா ஸ்கூல்லயும் விளையாட்டு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியிருக்கு. செய்திக்காக ஸ்கூலுக்கு போயிருந்த போது, 'எமிஸ்' பணிகள் குறித்து ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர்.
நடப்பு கல்வியாண்டுல, அனைத்து மாணவர்களையும் கலைத்திருவிழா போட்டியில, ஏதாவது ஒன்னுல பங்கேற்கணும்னு கல்வித்துறை உத்தரவிட்டிருக்கு. அதே நேரத்துல, மாணவர்களுக்கான குறுமைய விளையாட்டுகளும் நடக்கிறது.
இந்த நேரத்துல, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தி கலைத்திருவிழாவில் பங்கேற்க செய்ய வேண்டியதா இருக்கு. இதனால, விளையாட்டு போட்டிகளிலும் அவங்க முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால, மாணவர்களோட பெற்றோரும், ஆசிரியர்கள் கிட்ட கோவப்படுறாங்க.
கலைத்திருவிழா போட்டிய நடத்துறது மட்டுமில்லாம, அதோட பதிவுகளை 'எமிஸ்' இணையதளத்துக்கும் தவறாம கொடுக்கணும். ஆசிரியர்கள் வகுப்பு நடத்தறது இல்லாம, இந்த பணிகளையும் கவனிக்க வேண்டியிருக்குனு, புலம்பினர்.