தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : பிப் 09, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிகாரிகள 'கவனிச்சு' அத்துமீறல் உரிமம் இல்லாத விடுதிகளால சிக்கல் வால்பாறையில், உரிமம் இல்லாமலேயே தங்கும் விடுதிகள் நடத்துறாங்கனு, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து...

வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வர்றாங்க. ஆனா, மலை மேலே இரண்டு மாடிக்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது என விதிமுறை இருக்கு. அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஏழு மாடி கட்டடம் வரை கட்டியிருக்காங்க.

பல்வேறு துறைகளிடம் அனுமதி வாங்கிய பின் தான், தங்கும் விடுதி செயல்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கு. ஆனா, நகராட்சி அதிகாரிகளை 'கவனிச்சு', அத்துமீறி கட்டடம் கட்டி, அதை தங்கும் விடுதியாக செயல்படுத்துறாங்க.

அரசு அனுமதி இல்லாம செயல்படும் தங்கும் விடுதிகள்ல, அத்துமீறல்களும் அதிகம் நடக்குது. இ - பாஸ் நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, சுற்றுலா பயணியரை தங்க அனுமதிக்கறாங்க. இதனால, வால்பாறைக்கு யார் வர்றாங்க, எங்கிருந்து வர்றாங்க என்ற தகவல் வனத்துறை, போலீசாருக்கு தெரியறது இல்லை. வெளியூர்ல குற்ற சம்பவத்துல ஈடுபட்டு, இங்கு வந்து பதுங்குறாங்க.

ஊட்டிய போல வால்பாறையிலும் உரிமம் இல்லாம சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள அதிகாரிகள் ஆய்வு செய்து, 'சீல்' வைக்கணும். குறிப்பா, யானைகள் வழித்தடத்தில் செயல்படும் ரிசார்ட்களுக்கு 'சீல்' வைக்கணும். அதிகாரிகள் நேர்மையா செயல்பட்டால் தான் விதிமுறை மீறலை தடுக்க முடியும்னு, பேசிக்கிட்டாங்க.

ரேஷன் கார்டு லேட் ஆகறதுக்கு இப்படியொரு சங்கதி இருக்குதா? கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நண்பரோ, ரேஷன் கார்டு புதுசா வாங்க அப்ளை பண்ணி மூணு மாசமாச்சு. இப்ப வரைக்கும் கார்டு கிடைக்கலைனு, புலம்ப ஆரம்பித்தார்.

இது சம்பந்தமா அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டதுக்கு, 'ஆமாங்க... இப்ப, சிஸ்டம் எல்லாம் மாறிப்போச்சு. இது அதிகாரிகள் பிழை இல்லை. அரசாங்கத்தோட பிழைனு,' சொல்ல ஆரம்பித்தார்.

முன்பெல்லாம் புது ரேஷன் கார்டு வாங்கணும்னா ஆன்லைன்ல அப்ளை பண்ணி, 20 நாளுக்குள்ள கைக்கு ரேஷன் கார்டு வந்துரும். ஆனா, இப்ப, புது ரேஷன் கார்டு வாங்க அப்ளை பண்ணினா, கார்டு வர, 6 மாசமாகுது. இப்பவே ரேஷன் கார்டு கொடுத்துட்டாங்கனா அவங்களுக்கு, மாசம் மாசம் உரிமை தொகை பணம் கேட்டு விண்ணப்பிப்பாங்க.

அதை தவிர்க்கத்தான், ஆறு மாசம் பண்ணுறாங்க. இங்க மாதிரியே, ஒவ்வொரு தாலுகாவிலும் நிறைய அப்ளிகேஷன் பெண்டிங்ல இருக்கு. அவங்களுக்கெல்லாம் உடனே கார்டு கொடுத்துட்டா, உரிமைத்தொகை யார் கொடுப்பாங்க. அரசாங்கத்திலும் கொடுக்க பணம் இல்ல. அதனால தான் லேட் ஆகுதுனு. ஆனா, கார்டு நிச்சயம் கிடைச்சிடும்னு சொன்னார்.

ரேஷன் கார்டு லேட் ஆகறதுக்கு பின்னாடி இப்படியொரு சங்கதி இருக்கறது இப்ப தான் தெரியுது. இதே மாதிரி ஒவ்வொரு துறையிலும் என்னென்ன நடக்குதோ!

எல்லாரையும் 'கவனிச்சு' இருக்காங்க அதனால, கண்டுக்க மாட்டாங்க! உடுமலை ரயில்வே ஸ்டேஷன் முன், வாக்கிங் சென்றவர்கள் மரத்தடியில் நின்று தீவிர டிஸ்கஷனில் இருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து...

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ராமசாமி நகர் ரயில்வே கேட் போறதுக்குள்ள வெகு சிரமப்பட வேண்டியிருக்குது. இதுக்கு உழவர் சந்தையில் இருந்து ரயில்வே கேட் தாண்டற வரைக்கும், ரோட்டோரத்தில் கடைகள் தாறுமாறாக அதிகரிச்சுட்டு வருது.

காலை, மாலை நேரத்துல யாரும் அந்த வழியாகவே போக முடியறது இல்ல. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிக்கு பல முறை பெட்டிஷன் கொடுத்தும், ஆக்கிரமிப்பு கடைகள அகற்ற எந்த நடவடிக்கையும் இல்ல.

இந்த கடைகளுக்கு யார் அனுமதி கொடுத்திருக்காங்கனு தெரியல. இதுல இருந்து யாருக்கு வருமானம் போகுதுனு தெரியல. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த விஷயத்துல கைகோர்த்து வேலை செய்யறாங்கனு தெரியுது.

முதல்ல ஓரமாக இருந்த கடைங்க, இப்ப ரோட்டை ஒட்டி வந்துருக்கு. வண்டிகள ரோட்டு மேல நிறுத்தறாங்க. மக்கள் கேள்வி கேட்டா, எல்லாரையும் கவனிச்சுட்டு இருக்கோம். அதனால, யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்கனு, தெனாவெட்டா பதில் சொல்றாங்க.

சாயங்கால நேரத்துல கடைகள்ல கூட்டமா நிற்கிறதால, அந்த வழியா ஸ்கூல் குழந்தைங்க போகவே சிரமப்படுறாங்க. ஸ்கூல் பஸ், ஆம்புலன்ஸ் எதுவும் போக முடியறது இல்லை. விபத்து ஏற்படும் அபாயம் இருந்தும், டிராபிக் போலீசும் இந்த பக்கம் வர்றதே இல்லனு ஆதங்கப்பட்டு பேசிக்கிட்டாங்க.

செக்போஸ்ட்ல கண்காணிப்பு இல்லாட்டி வனத்துக்குள்ள பாதுகாப்பு இருக்காது பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸ்ல, நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். 'என்னப்பா செக்போஸ்ட்ல செக்கிங்கே இல்லை,' என பேச ஆரம்பித்தார். எங்கே, என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.

நம்ம வனத்துறை செக்போஸ்ட்ட தான் சொல்லுறேன். கடந்த வாரம் டாஸ்மாக் பார் ஊழியர்கள் டாப்சிலிப் போனாங்க. அவங்கள சேத்துமடையில எந்த சோதனையும் செய்யாததால, அவங்க மதுபாட்டில்களை சுதந்திரமாக எடுத்துக்கிட்டு போயிட்டாங்க.

டாப்சிலிப்ல பரிசோதனை செய்ததால, வனத்துறை அதிகாரிகளுக்கும், அவங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கு.

சேத்துமடை செக்போஸ்ட்லேயே நல்லா செக் பண்ணியிருந்தா இந்த பிரச்னையே வந்திருக்காது. வர்றவங்கள சோதனை செய்யத்தான் அங்க செக்போஸ்ட்டே இருக்கு. ஆனா, முக்கியமாக வர்றவங்க கிட்ட வனத்துறையினர் 'கரிசனம்' காட்டுறதலா இந்த பிரச்னை ஏற்படுது. செக்போஸ்ட்ல செக் பண்ணாம விட்டுட்டா என்ன வேண்டும்னாலும் எடுத்துட்டு போவாங்க. வனத்தை காக்குறவங்க அலட்சியமாக இருக்க கூடாது.

செக்போஸ்ட்ல சாதாரண மக்கள் கிட்ட காட்டுற நடவடிக்கைய, பாரபட்சமில்லாம எல்லோர் கிட்டவும் காட்டினா தப்பு நடக்கறத தடுக்கலாம். இதுக்கு செக்போஸ்ட்ல இருக்கற வனத்துறையினர் மனசு வைக்கணும்னு, சொன்னார்.

ஊரெல்லாம் ஓடுது 'சரக்கு' ஆறு; கட்டுப்படுத்த போறது யாரு!

உடுமலை தாலுகா ஆபீஸ்ல நண்பரை சந்தித்தேன். 'இப்படியே போச்சுனா, மது குடிக்காத ஆட்கள விரல் விட்டு எண்ண வேண்டிய நிலைமை உருவாயிரும்னு,' பேச ஆரம்பித்தார். என்னனு விசாரிச்சேன். உடுமலை நகர பகுதியில, டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அங்குள்ள பார்களில், 24 மணி நேரமும் சட்ட விரோதமாக 'சில்லிங்' மது விற்பனை அமோகமாக நடக்குது. அதே போல், யூனியன் ஆபீஸ், பழநி ரோடு, பார்க் ரோட்டுல தனியார் இடங்கள், தள்ளுவண்டி கடைகள் என, திரும்பிய பக்கமெல்லாம் மது விற்பனை கனஜோரா நடக்குது. நகருக்குள்ள, இரு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கு. ஆனா, மனமகிழ் மன்றங்கள் பேருல, ஆறு தனியார் மதுக்கடைகளும் புதிதாக அனுமதி கொடுத்திருக்காங்க. அதேமாதிரி, கிராமப்பகுதிகள்ல, 'சில்லிங்' மது விற்பனையும் தாராளமா நடக்குது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக தனியார் மதுக் கடைகளுக்கும் திறந்திருக்காங்க. உடுமலையில, நகரம், கிராமம்னு பாகுபாடில்லாம, சட்ட விரோதமாக மது விற்பனை, போலீசார், அரசு துறை அதிகாரிகள், ஆளும்கட்சியினர் துணையோடு நடக்குது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பாக்கெட்டுகள் நிரம்புது, மக்களோட பர்ஸ் காலியாகுது. இப்படியே மது விற்பனை அதிகரிச்சு, எப்ப பார்த்தாலும் எல்லாரும் போதையில தள்ளாடுறாங்க. டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்படும்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கும் நிலையில, மதுக்கடைகளை பெருகியிருக்கு. இதனால, வரும் தேர்தல்ல, சட்ட விரோத மது விற்பனை பெரும் பிரச்னையா இருக்கப்போகுதுனு, சொன்னார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us