/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் அப்புறப்படுத்த கோரிக்கை
/
தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 05, 2025 11:23 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டங்களின்படி, 70 டெசிபலுக்கு குறைவான ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்களில், 120 முதல் 180 டெசிபல் வரையிலான ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தாலும், இத்தகைய விதிமீறல் தொடர்கிறது. குறிப்பாக, பொள்ளாச்சி - கோவை இடையிலான தனியார் பஸ் மட்டுமின்றி, தனியார் டவுன் பஸ்களிலும் ஏர்ஹாரன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
சாலைகளில் நடந்து செல்பவர்களை, அஞ்சி நடுங்க வைக்கும் விதமாக, அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏர்ஹாரன் சப்தத்தை கேட்கும் போது செவிப்பறை பாதிக்கப்படுகிறது.
பஸ்கள் மட்டுமின்றி லாரி, கார் மற்றும் பைக்குகளிலும், ஏர் ஹாரன்களை பொருத்தி, நகரப்பகுதி ரோடுகளில் அலற விடுகின்றனர். ஏர்ஹாரன்கள் பயன்பாட்டை தவிர்க்க, தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக டிப்போ மேலாளர்கள், லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பி வைக்க வேண்டும்.
அதனையும் மீறி ஏர்ஹாரன் பயன்படுத்தினால், வாகனப் பதிவுச் சான்று ரத்து செய்வது குறித்து, நோட்டீஸ் வழங்க வேண்டும். தவிர, உரிய கால அவகாசத்துக்கு பின், ரத்து செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.