/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகமெடுக்கும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு
/
வேகமெடுக்கும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு
ADDED : பிப் 22, 2024 11:55 PM

-நமது நிருபர்-
ஆகஸ்ட்டில் துவங்கி நடந்து வரும், வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணி, வரும் பிப்., 26ல் நடக்கவுள்ள அடிக்கல் நாட்டும் விழா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவை சந்திப்புக்கு அருகிலுள்ள, வடகோவையில் மேலும் இரண்டு நடைமேடைகளை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், வடகோவை மற்றும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த, முறையே ரூ. 7.5 கோடி மற்றும் ரூ.24 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்களுக்கு, அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, காணொளியில் இவற்றைத் துவக்கி வைக்கிறார்.
இந்த பட்டியலில், ஆகஸ்டில் துவங்கி நடந்து வரும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணியும் சேர்க்கப்பட்டுள்ளது.
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணி, வரும் மே 31க்குள் முடிவடையுமென்று, தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் அதற்குள் முடியுமா என்பது சந்தேகமாகவுள்ளது. பிரதமர் துவக்கி வைக்கும் திட்டப்பணிகள் பட்டியலில் இந்த ஸ்டேஷனும் சேர்ந்திருப்பதால், இனியாவது சீரமைப்பு வேலைகள் வேகமெடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.