UPDATED : அக் 27, 2026 07:59 PM
ADDED : அக் 27, 2026 07:56 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் இயங்கி வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கிளையில், நீலகிரி மாவட்ட விவசாயிகளால் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் நேரடியாக கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, தற்போது மண்டிகளுக்கு உருளைக்கிழங்கு வரத்து ஒரே நாளில் திடீரென 500 மூட்டைகள் வரை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு 175 மூட்டைகள் மட்டுமே வந்திருந்தன. ஆனால், இன்று கூடுதலாக 525 மூட்டைகள் வரத்து அதிகரித்ததன் காரணமாக, மொத்த வரத்து 700 மூட்டைகளாக உயர்ந்தது.
வரத்து கணிசமாக உயர்ந்த அதே வேளையில், வெளிச்சந்தையில் டிமாண்ட் இல்லாத காரணத்தால் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் தரமான உருளைக்கிழங்கு 45 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று அதிகபட்சமாக ரூ.3,140 வரை விற்பனையானது. ஆனால், நேற்று வரத்து அதிகரிப்பு மற்றும் மந்தமான தேவை காரணமாக, அதிகபட்ச விலையே ரூ.2,970 குறைந்து சரிவைக் கண்டது.
இந்த திடீர் விலை சரிவு மலைக்கிராமங்களில் இருந்து உருளைக்கிழங்கைக் கொண்டு வந்த நீலகிரி மாவட்ட விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
