ADDED : அக் 12, 2025 11:38 PM
கோவை:கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதத்தில், 'நான் உயிர் காவலன்' உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு, மோனோ ஆக்டிங் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டனர்.
குழந்தைகள் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, மற்றவர்களிடம் பகிரக்கூடிய வகையில், மாணவர்களுக்காக தனிப்பட்ட பாடலை, பள்ளி தலைமையாசிரியர் உருவாக்கி வழங்கினார்.
தலைமையாசிரியர் சகுந்தலா கூறுகையில், “சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள், நினைவில் வைத்துக்கொள்ள பாடல் இயற்றி, அவர்களை பாட வைத்துள்ளோம். இது, அவர்கள் மனதில் எளிதாக பதியும்; என்றும் நினைவில் இருக்கும். சாலை விதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து, குழந்தைகள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதன் மூலம் நகரின் சாலை பாதுகாப்பில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்,'' என்றார்.