/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டை ஊசிவளைவுகளில் ரோடு அகலப்படுத்தும் பணி
/
கொண்டை ஊசிவளைவுகளில் ரோடு அகலப்படுத்தும் பணி
ADDED : பிப் 06, 2025 08:53 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் ரோடு அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் வரும் சுற்றுலா வாகனங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சமீப காலமாக வால்பாறை - ஆழியாறு ரோட்டில் வாகன விபத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், 40வது கொண்டை ஊசி வளைவில், வாகன விபத்து ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 2 கோடியே, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள பெரும்பாலான கொண்டை ஊசி வளைவுகளில், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரோடு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 40வது கொண்டை ஊசி வளைவில், மூன்று ரோடுகள் சந்திப்பதாலும், ரோடு குறுகலாக உள்ளதாலும், வாகனங்கள் வளைந்து செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட எஸ்டேட் அதிகாரிகளிடம் பேசி, தேவையான தேயிலை செடிகள் அகற்றப்பட்ட பின், ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. பணி நிறைவடைந்த பின், வாகனங்கள் எளிதில் சென்று வரமுடியும்.
இவ்வாறு, கூறினர்.

