/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமின்றி போடுவதால் பொத்தலாகும் சாலைகள் தடுமாற்றம் அடையும் வாகன ஓட்டிகள்
/
தரமின்றி போடுவதால் பொத்தலாகும் சாலைகள் தடுமாற்றம் அடையும் வாகன ஓட்டிகள்
தரமின்றி போடுவதால் பொத்தலாகும் சாலைகள் தடுமாற்றம் அடையும் வாகன ஓட்டிகள்
தரமின்றி போடுவதால் பொத்தலாகும் சாலைகள் தடுமாற்றம் அடையும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 12, 2025 05:12 AM

காந்திபுரம்: கோவை மாநகராட்சி பராமரிப்பில், 3,236.96 கி.மீ. சாலைகள் உள்ளன. இதில், 2,659.67 கி.மீ. தார் சாலை, 258.88 கி.மீ. மண் சாலை, 294 கி.மீ. சிமென்ட் சாலையாக உள்ளன. பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் வார்டுகளில் உள்ள குறுக்கு சாலைகள் சீரமைக்க வேண்டியுள்ளது. இவற்றில் 417.37 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ.219.72 கோடி கேட்டு தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ரோடு போடுவதற்காக மட்டும் கோடிக்கணக்கில் மாநகராட்சிக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தரமின்றி போட்டிருப்பதால் சில நாட்களிலேயே விரிசல் ஏற்பட்டு, பள்ளம் ஏற்படுகிறது. சில இடங்களில் ரோடு போடும் போது பளபளவென காணப்படுகிறது. மழை பெய்யும் சமயத்தில் குழி ஏற்பட்டு விடுகிறது.
ராம்நகர் காளிங்கராயர் வீதியில் சில மாதங்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டது. மாநகராட்சியின் கவனத்துக்கு தெரியப்படுத்தியதும் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டது. அதன்பின், மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. உடனே, இப்பகுதியில் தார் ரோடு சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழைக்கு மீண்டும் ரோடு பெயர்ந்து, பள்ளம் உருவாக ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு தார் ரோடு தரமின்றி போடப்படுகிறது. இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். நான்கு வழிகளில் இருந்து வாகனங்கள் வருவதால் இரவு நேரத்தில் பள்ளம் தெரியாமல் விபத்தை சந்திக்கின்றனர்.
ஒரே இடத்தில் திரும்ப திரும்ப ரோடு மோசமாவதற்கான காரணங்களை மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கண்டறிய வேண்டும். இவ்வழியை பயன்படுத்தும் வாகன போக்குவரத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப தரமாக ரோடு போட வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை வேலை செய்யும்போதும், சில லட்சங்கள் செலவழித்ததாக கணக்கெழுதப்பட்டு பணம் எடுக்கப்படுமே தவிர, மக்களுக்கு தரமான ரோடு வசதி கிடைக்காது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

