/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.7 கோடி 'ரவுண்டானா'வாலும் தீராது பிரச்னை அவசரத்தேவை!
/
ரூ.7 கோடி 'ரவுண்டானா'வாலும் தீராது பிரச்னை அவசரத்தேவை!
ரூ.7 கோடி 'ரவுண்டானா'வாலும் தீராது பிரச்னை அவசரத்தேவை!
ரூ.7 கோடி 'ரவுண்டானா'வாலும் தீராது பிரச்னை அவசரத்தேவை!
ADDED : மார் 11, 2024 01:32 AM

-நமது நிருபர்-
லாலி ரோடு சந்திப்பில், பாலமும் கட்டாமல், விரிவாக்கமும் செய்யாமல், ரூ.7 கோடி செலவழித்து, 'ரவுண்டானா' அமைப்பதால், நிரந்தரத் தீர்வு கிடைக்காது என்று மக்களிடம் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
கோவை, தடாகம் ரோடு, மருதமலை ரோடு, கவுலி பிரவுன் ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் லாலி ரோடு சந்திப்பு, நகரின் முக்கியமான சாலை சந்திப்பாகவுள்ளது. அங்கு 'சிக்னல்' இருந்த வரை, காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்போது 'சிக்னல்' அகற்றப்பட்டு, 'ரவுண்டானா' முறையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதனால், வாகன நெரிசல் குறைந்திருந்தாலும், காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகளவில் வரும் வாகனங்கள், ஊர்வலம் செல்வதைப் போல, மிகவும் மெதுவாகத்தான் வர வேண்டியுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, வேளாண் பல்கலையிலிருந்து தடாகம் ரோட்டுக்கு வரும் பாதையில், சந்திப்புக்கு அருகில் வேகத்தடை அமைத்தபின்பு, பரபரப்பான நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தும் வருகிறது.
இந்நிலையில், இந்த சந்திப்புப் பகுதியில், 'ரவுண்டானா' அமைப்பதற்கு, சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதியில் ரூ.6 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அங்குள்ள கோவிலைச் சுற்றிலும் சுவர் கட்டுவது, இரண்டு சாலைத்தீவுகள் அமைப்பது ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு, வேறு என்ன முக்கியமான பணிகள் நடக்கப்போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது 'சிக்னல்' அகற்றப்பட்ட நிலையில், வேளாண் பல்கலையிலிருந்து வரும் வாகனங்கள், கவுலி பிரவுன் ரோடு மற்றும் தடாகம் ரோடு பால் கம்பெனி நோக்கிக் கடந்து செல்லும் போது, வேறு திசைகளில் இருந்து வாகனங்களுடன் முட்டி மோத வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான எந்தக் கட்டமைப்பும் இப்போது ஏற்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. வேகத்தடை இதற்கு தீர்வு இல்லை.
இந்த இடத்தில் நான்கு ரோடுகளையும் இணைக்கும் வகையிலான மேம்பாலம் கட்டுவதே, நிரந்தரத் தீர்வாகும்.
ஆனால் 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்காக, இந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறை கைவிட்டுள்ளது. குறைந்தபட்சம், லாலி ரோடு சந்திப்புப் பகுதியில், வேளாண் பல்கலை மற்றும் வனக்கல்லுாரி வளாகச் சுவர்களில் இடம் எடுத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வேளாண் பல்கலை ரோட்டிலிருந்து தடாகம் ரோடு செல்லும் வாகனங்கள், இடது ஓரத்தில் கடந்து செல்லும் வகையில் வேளாண் பல்கலை வளாகத்தில் சற்று இடம் எடுக்க வேண்டும்; அதேபோல, தடாகம் ரோட்டிலிருந்து கவுலி பிரவுன் ரோடு செல்லும் வாகனங்கள், இடது ஓரத்தில் செல்லும் வகையில், வனக்கல்லுாரி வளாகத்திலிருந்தும் இடம் எடுத்து விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோன்று, பால் கம்பெனியிலிருந்து மருதமலை ரோடு செல்லும் வாகனங்கள், தனியாக இடது புறம் செல்லவும், தடாகம் ரோடு அல்லது கவுலி பிரவுன் ரோடு செல்லும் வாகனங்கள், தனியாகப் பிரிந்து செல்லவும் தகுந்த கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான அரசு மற்றும் தனியார் இடங்களைக் கையகப்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் மிக கடமையாகும்.
பாலத்தைக் கைவிட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை, குறைந்தபட்சம் சந்திப்பை விரிவாக்கமாவது செய்தால் நல்லது.

