/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
/
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : அக் 07, 2024 12:48 AM

அன்னுார் : அன்னுாரில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.,) மேட்டுப்பாளையம் கோட்டம் சார்பில், 99வது ஆண்டு விஜயதசமி விழா நேற்று அன்னுாரில் நடந்தது.
தென்னம்பாளையம் சாலையில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் காவி கொடி அசைத்து அணிவகுப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ராணுவ மிடுக்குடன் வெள்ளை காக்கி சீருடை அணிந்த சிறுவர் முதல் 70 வயது முதியவர் வரை 500க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். பாண்டு வாத்திய இசை குழு இசைத்தபடி சென்றது.
ஊர்வலம், எக்சேஞ்ச் ரோடு, கோவை ரோடு, தென்னம்பாளையம் ரோடு வழியாக யூஜி மஹாலில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு கூட்டம் நடைபெற்றது.ஆர்.எஸ்.எஸ்., கோட்டத்தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். தொண்டர்கள் பயிற்சி செய்து காண்பித்தனர். தொழிலதிபர் ரகுபதி தலைமை வகித்தார்.
காமாட்சிபுரி ஆதீன இரண்டாவது சன்னிதானம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பேசுகையில், ''ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை பயிற்சி பெற்று நாட்டு பற்றுடன் உள்ளனர்.
கடலையும் நீந்தி கடக்கும் வலிமையுள்ள இளைஞர்கள் தேவை என சுவாமி விவேகானந்தர் அறைகூவல் விடுத்தார். அதை ஆர்.எஸ்.எஸ்., நிறைவேற்றுகிறது,'' என்றார்.
ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில், ''உலக வரலாற்றில் பாரதம் முக்கிய பங்கெடுத்துள்ளது. பழமையான பல நாகரிகங்கள் அழிந்தன. ஆனால் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே வாழ்வியல் முறை இந்து வாழ்வியல் தான்.
இதற்கு சங்கம் முக்கிய காரணம். எத்தனை படையெடுப்புகள் வந்த போதும் நமது கலாசாரத்தை அழிக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ஸில் தரப்படும் தினசரி பயிற்சி உடலுக்கு மனதுக்கும் ஏற்றது,'' என்றார்.
மழை பெய்த போதும் தொண்டர்கள் நனைந்தபடி கூட்டத்தில் பங்கேற்றனர். கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், கூடுதல் எஸ்.பி., நான்கு டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், என 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஹெட் கேவார், கோல்வால்கர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. அணிவகுப்பு ஊர்வலத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.