துாய்மை பணியாளர்களின் ஸ்டிரைக் தொடர்கிறது: பேச்சுவார்த்தை தோல்வி
துாய்மை பணியாளர்களின் ஸ்டிரைக் தொடர்கிறது: பேச்சுவார்த்தை தோல்வி
UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:48 PM

கோவை: சம்பள உயர்வு, பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் வேலை நிறுத்தம் நடந்தது.
அதிகார குரல் உள்ளிட்ட சில சங்கங்கள் நேற்று பணிக்கு திரும்பினர். ஆனாலும் 70 சதவீதம் தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லவில்லை.
டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கமிஷனர் ரவி தேஜா பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டர் அறிவித்த தினக்கூலியை முழுமையாக வழங்க வேண்டும். போனஸ் முறையாக கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் பணிக்கு எடுத்த 325 தூய்மை பணியாளர்கள், வேறு பணியில் உள்ளனர். அவர்களை தூய்மை பணிக்கு அனுப்ப வேண்டும்’’ என்று கூறினர்.
கமிஷனர் ரவி தேஜா, ‘‘இந்த மாதம் சம்பளம் உயர்த்த முடியாது. ஜனவரி முதல் உயர்த்த நடவடிக்கை எடுக்கிறோம். மாநகராட்சியில் மட்டுமே ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சிகளில் வழங்கவில்லை. 325 பேர் தூய்மை பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.
அவரது இந்த பதிலால் தொழிற்சங்கத்தினர் அதிருப்தியடைந்தனர். பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு செய்து வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.
