/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி
/
வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி
வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி
வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி
ADDED : டிச 03, 2024 11:37 PM

சரவணம்பட்டி: சரவணம்பட்டியில் காலையிலும் மாலையிலும் கனரக வாகனங்கள் அதிகரிப்பால், நெரிசல் அதிகரித்துள்ளது. தினம் தினம் நடக்கும் உரசல், மோதலால் காயமும் உயிர் பலியும் ஏற்படுகிறது. நகரில் விபத்தை குறைப்பதாக கூறி களம் இறங்கியுள்ளதாக கூறிக்கொள்ளும் போக்குவரத்து போலீசார், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
கோவை -- சத்தி மெயின்ரோட்டில் சரவணம்பட்டி உள்ளது. தொழில், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள இங்கு, ஒவ்வொரு நாளும் போக்குவரத்தில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
சாலை நிறைய வாகனங்கள்
இப்பகுதியில் ஐந்து கல்லுாரிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளிகள், கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. இந்த நிறுவனங்கள் காலை 9:00 மணி முதல் செயல்பட துவங்குகின்றன.
ஒரே சமயத்தில் கல்லுாரிகளுக்கு செல்லும் பஸ்கள், பள்ளிகளுக்கு செல்லும் வேன்கள், தகவல் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு செல்லும் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள்... என ரோடு நிறைந்து விடுகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் சத்தி ரோட்டிலிருந்து துடியலுார் ரோடு செல்லும் ரோட்டில் உள்ளன. இதனால், துடியலுார் ரோட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது போன்றே, சத்தி ரோட்டிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டிலும் நெரிசல் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அடுத்து, பத்திர பதிவு ஆபீஸ் உள்ளதால், இரண்டு புறங்களிலும் கார்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. ரோட்டில் ஒதுங்க வசதி இல்லாமல் இங்கும் நெரிசல் ஏற்படுகிறது.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, விபத்துக்கு காரணமாக அமைவது, இரும்பு கம்பிகள், ஸ்டீல் ரோல்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தான். நீண்ட அமைப்புக் கொண்ட இந்த லாரிகள், சந்திப்பில் திரும்புவது எளிதானதாக இருப்பதில்லை.
ஒரு முறை இந்த வகை லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. கான்கிரீட் லாரிகளும் இந்த வழியாக செல்கின்றன. ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.
சரவணம்பட்டி விளாங்குறிச்சி சந்திப்பில், சில நாட்களுக்கு முன் 3 விபத்துக்கள் ஏற்பட்டன. ரோட்டை கடக்க முயன்ற தம்பதியினர் மீது, ஆட்டோ மோதி ஒருவர் அதே இடத்தில் இறந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரியும் காரும் உரசி கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.
ஆகவே, இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.