/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு 'சீல்'
/
வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 10, 2025 10:41 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர், இந்தாண்டு வாடகை ஒரு கோடியே, 65 லட்சம் ரூபாய் செலுத்தாமல், தொடர்ந்து கடை நடத்தி வருகின்றனர்.கடைகளுக்குரிய வாடகைகளை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடைகள் உள் வாடகைக்கு விடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்த கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது: நகராட்சிக்கு சொந்தமான, 436 கடைகள் உள்ளன. குத்தகை எடுத்தவர்களுக்கு நிலுவையின்றி வாடகை செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதில், அதிகபட்சமாக, 30 கடைகள் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
அவர்களுக்கு பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், நான்கு கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. எனவே, கடைகளை குத்தகை எடுத்தவர்கள், வாடகை தொகையினை ஒரு வார காலத்துக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளை பூட்டி 'சீல்' வைப்பதுடன், மறு ஏலத்தில் விட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போன்று, ஆய்வு மேற்கொள்ளும் போது, எவரேனும் உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ, கடையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலோ; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்து மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வாடகை செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
உடுமலை, பிப். 11-
'நகரில், அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த ரோட்டில், செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும்,' என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை பசுபதி வீதியில், நகர கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உட்பட அரசு அலுவலகங்களும், வணிக கடைகளும் அதிகளவு உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி ரோட்டிலிருந்து பிரியும் இந்த வீதியில், காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் மிகுந்து இருக்கும்.
இந்நிலையில், நகர கூட்டுறவு வங்கி எதிரில், 'டாஸ்மாக்' மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், ஏற்கனவே, நெரிசலில் சிக்கி தவிக்கும் வீதியில், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளது.
குறிப்பாக, கடைக்கு வரும் 'குடி'மகன்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதுடன், இரவு நேரங்களில், அரசு அலுவலகங்கள் முன்பு தஞ்சமடைகின்றனர்.
இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. கூட்டுறவு வங்கிக்கு வரும் மக்கள், எதிரேயுள்ள மதுக்கடையால், அச்சத்திற்குள்ளாகின்றனர்.
இதே போல், பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை, அரசுப்பள்ளி, நகராட்சி பூங்கா அமைந்துள்ளன. இந்த ரோட்டில், பூங்கா அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
அங்கு, 'குடி'மகன்கள் ரோட்டிலேயே நின்று மது அருந்துகின்றனர். சிலர், மதுபாட்டில்களோடு, அண்ணா பூங்கா முன்பும், நகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியும் அமர்ந்து கொள்கின்றனர்.
சில நேரங்களில் போதை நபர்கள், ரோட்டிலேயே படுத்துக்கொள்கின்றனர். இதனால், அவ்வழியாக பெண்கள் செல்ல முடிவதில்லை.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து செல்பவர்களும், வேறு வழியாக, சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இவ்வாறு, போக்குவரத்துக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலாக இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.