ADDED : நவ 25, 2024 10:47 PM
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதை புதிய சட்டங்கள் உறுதி செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம், பெண் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்று பதிவு செய்ய வேண்டும். இல்லாவிடில் ஒரு ஆண் மாஜிஸ்திரேட், ஒரு பெண்ணின் முன்னிலையில் வாக்குமூலம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
ஒரு பெண்ணை திருமணம் முடிக்கும் எண்ணம் இல்லாமல், அவருடன் உடல் ரீதியாக தொடர்பு ஏற்படுத்தி ஏமாற்றினாலோ, வேலை வாங்கி தருவதாகவோ, வேலையில் பதவி உயர்வு தருகிறேன் என்று கூறி ஏமாற்றினாலோ, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு குறைந்த பட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள்சிறை மற்றும் அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணை, அவர் விரும்பாத போது தொடர்பு கொண்டாலும், தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலும், இன்டர்நெட், இ-மெயில், அல்லது ஏதோ ஒரு எலக்ட்ரானிக் பொருட்கள் வாயிலாக பின் தொடர்ந்தால், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

