/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் நிரம்பியது சோலையாறு அணை; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
/
மீண்டும் நிரம்பியது சோலையாறு அணை; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
மீண்டும் நிரம்பியது சோலையாறு அணை; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
மீண்டும் நிரம்பியது சோலையாறு அணை; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 17, 2025 10:16 PM

வால்பாறை; சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது முறையாக அணை நிரம்பியது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் மழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த மாதம், 26ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்ததால், சோலையாறு அணையின் நீர்மட்டமும் சரியத்துவங்கியது. நேற்று முன்தினம் பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்ய துவங்கியது. இதனால், சோலையாறு அணை நேற்று மாலை, இரண்டாவது முறையாக நிரம்பியது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீர்மட்டம் உயர்வு
வால்பாறையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று மாலை முழுக்கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு, 2,246 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு, 1,505 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 118.55 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 66.60 அடியாகவும் உயர்ந்தது.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 39, பரம்பிக்குளம் - 18, ஆழியாறு - 2, வால்பாறை - 37, மேல்நீராறு - 118, கீழ்நீராறு - 82, காடம்பாறை - 10, மேல்ஆழியாறு - 5, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 15, மணக்கடவு - 14, துாணக்கடவு - 13, பெருவாரிப்பள்ளம் -15, நவமலை - 5, பொள்ளாச்சி - 4 என்ற அளவில் மழை பெய்தது.