/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பாலம் பணி முடிந்தது: அலைச்சல் குறைவதால் மக்கள் நிம்மதி... அப்பாடா !
/
எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பாலம் பணி முடிந்தது: அலைச்சல் குறைவதால் மக்கள் நிம்மதி... அப்பாடா !
எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பாலம் பணி முடிந்தது: அலைச்சல் குறைவதால் மக்கள் நிம்மதி... அப்பாடா !
எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பாலம் பணி முடிந்தது: அலைச்சல் குறைவதால் மக்கள் நிம்மதி... அப்பாடா !
ADDED : அக் 16, 2025 11:14 PM

கோவை: ஒண்டிப்புதுார் அருகே எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்திசில நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது அப்பகுதி மக்களிடம் நிம்மதியை தந்துள்ளது.
சிங்காநல்லுார் அருகே ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்ல, 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த, 2010ல் அறிவிக்கப்பட்டது.
2011ல் ஆட்சி மாற்றத்துக்கு பின் இரு ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகு, 2013ல் மேம்பாலம் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை(நபார்டு) துவங்கியது.
'சர்வீஸ்' ரோட்டுக்கு போதிய நிலம் கையகப்படுத்தாமல் பணிகளை துவங்கியதால் அப்பகுதியினர் ஐகோர்ட் சென்றனர்.
பணிகள் நிறுத்தப்பட்டதால் பாலம் பணிகள் இழுபறியாகவே இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடந்த, 2021ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.29 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டது. கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.8.80 கோடி ஒதுக்கி, 2023ல் மீண்டும் வேலை துவங்கப்பட்டது.
கடந்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அணுகுசாலை, சர்வீஸ் ரோடு, மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாமல் இருந்தன.தற்போது, தார் ரோடு உட்பட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.
அதாவது, 700 மீ., நீளத்துக்கும், 8.5 மீ., அகலத்துக்குமான மேம்பாலத்தில் இன்னும் மின் விளக்குகள் மட்டும் பொருத்த வேண்டியுள்ளது.
இபணிகளை இம்மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
பாலம் திறக்கப்பட்டால் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்கு மட்டுமின்றி, இருகூர் உள்ளிட்ட இடங்களுக்கும் எளிதில் சென்றுவிடலாம். போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
15 நாட்களில்!
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இந்திரனிடம் கேட்டபோது,''எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பால பணிகளானது ரூ.55.40 கோடி செலவில்(நில ஆர்ஜிதம் உட்பட) முடிவடைந்துள்ளது.
''இன்னும் மின் விளக்குகள் மட்டும் பொருத்த வேண்டியுள்ளது. அப்பணிகளை, 15 நாட்களில் முடித்து தருவதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பணி முடிந்தவுடன் பாலத்தை திறப்பதற்கு அரசிடம் தேதி கேட்கப்படும்,'' என்றார்.