/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகையில் ரூ. 23 கோடி வளர்ச்சி பணிகள் ஆய்வு
/
சிறுமுகையில் ரூ. 23 கோடி வளர்ச்சி பணிகள் ஆய்வு
ADDED : பிப் 02, 2024 10:42 PM
மேட்டுப்பாளையம்;தமிழக அரசு அறிவித்த 'உங்களை தேடி உங்கள் ஊரில்' சிறப்பு முகாம், சிறுமுகை பேரூராட்சியில் நடந்தது. கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரக நாத் சிங், முகாமில் பங்கேற்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
சிறுமுகை பேரூராட்சியில், 19.97 கோடி ரூபாய் செலவில், அம்ரூத் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. வச்சினம்பாளையத்தில் தலைமை நீரேற்று நிலையத்தையும், குழாய் விஸ்தரிப்பு பணிகளையும், மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணிகளையும், உதவி இயக்குனர் பார்வையிட்டார்.
3.02 கோடி ரூபாய் மதிப்பில் சந்தை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். பின்பு நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்து, வீடு வீடாக சென்று, கொசு மருந்து அடிக்கப்படுகிறதா என, பொதுமக்களிடம் உதவி இயக்குனர் கேட்டறிந்தார்.
அதன் பின்பு சந்தை வளாகத்தில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், குப்பைகளை உரமாக்கும் பணிகளையும் பார்வையிட்ட பின், அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட, 60 மனுக்களில் அதிகமான மனுக்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டிருந்தனர்.
பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனடியாக தீர்வு காண வேண்டும். பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும். காலதாமதம் செய்வதை தவிர்க்க வேண்டும், என பேரூராட்சி பணியாளர்களுக்கு, உதவி இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுப் பணியில் உதவி தணிக்கை அலுவலர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் அருள் பிரகாஷ், சிறுமுகை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுந்தர்ராஜன் உடன் இருந்தனர்.

