/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகர் பகுதிகளை பாதுகாக்க 'ஸ்மார்ட் காக்கி!' இனி 24 மணி நேரமும் ரோந்து
/
புறநகர் பகுதிகளை பாதுகாக்க 'ஸ்மார்ட் காக்கி!' இனி 24 மணி நேரமும் ரோந்து
புறநகர் பகுதிகளை பாதுகாக்க 'ஸ்மார்ட் காக்கி!' இனி 24 மணி நேரமும் ரோந்து
புறநகர் பகுதிகளை பாதுகாக்க 'ஸ்மார்ட் காக்கி!' இனி 24 மணி நேரமும் ரோந்து
ADDED : ஜூலை 12, 2025 01:25 AM

கோவை; புறநகர் பகுதிகளில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில், போலீசார் சார்பில், 'ஸ்மார்ட் காக்கி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய, ஆறு உட்கோட்டங்களில், 1,300 போலீசார் பாதுகாப்பு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.
புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை, இரவு நேர வழிப்பறி, அடிதடி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. இது போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பாக, பொதுமக்கள் போலீசாரை 100 அல்லது ஸ்டேஷன் எண்களுக்கு அழைத்து தகவல் கூறினால், போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்கு எட்டு நிமிடம் ஆகிறது.
ஸ்மார்ட் காக்கி
இந்த நேரத்தை குறைக்கவும், மாவட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் வகையிலும், 'ஸ்மார்ட் காக்கி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, சூலுார், அன்னுார் ஆகிய ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, தலா 2 பைக் மற்றும் பிற 25 ஸ்டேஷன்களுக்கு, தலா ஒரு பைக், 30 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 35 பைக்குகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பைக்கிற்கும் தலா இரண்டு போலீசார் என, 70 போலீசார் 'ஷிப்ட்' அடிப்படையில், 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு, 'டைம் மேப்' வழங்கப்பட்டுள்ளது.
காலை, மாலையில் கடமை
அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களை கண்காணித்து, குற்றங்கள் ஏற்படாத வகையில் பணியாற்றுவர். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில், பணியில் இருப்பர்.
போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பைக்குகளில், 'ஜி.பி.எஸ்.,' பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவசர அழைப்பு வந்தால், ஜி.பி.எஸ்., உதவியுடன் அருகில் உள்ள, 'காக்கி'யை அழைத்து சம்பவ இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்படும்.
அவர்களுக்கு 'பாடி கேமரா', நவீன மைக், வயர்லெஸ் கருவி, இ- சலான் கருவி, மது போதையில் வருவோரை பரிசோதிக்கும் கருவி(பிரெத் அனலைசர்), கை விலங்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
குற்றங்கள் குறையும்
திட்டத்தை துவக்கி வைத்து எஸ்.பி., கார்த்திகேயன் பேசுகையில், ''பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், 'ஸ்மார்ட் காக்கி' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பொது மக்களின் பார்வையில் போலீசார் இருப்பர்.
பொதுமக்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், தகவல் தெரிவித்தவுடன் உதவும் வகையில் இத்திட்டம் செயல்படும். இதில் உள்ள போலீசாருக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடம் எப்படி பேச வேண்டும், எப்.ஆர்.எஸ்., செயலி மற்றம் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ய, 'பரிவாகன்' செயலிகளின் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, மாவட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் குறையும்,'' என்றார்.