/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்வளமும், நீர்வளமும்; பள்ளியில் கருத்தரங்கம்
/
மண்வளமும், நீர்வளமும்; பள்ளியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 15, 2025 08:48 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், 'மண்வளமும், நீர்வளமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம், பள்ளியின் காந்தி கலையரங்கத்தில் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுசாமி வரவேற்றார். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரியின் உதவி பேராசிரியர் யுவராஜா தட்சிணாமூர்த்தி பேசியதாவது:
மண்வளம் என்பது மண்ணின் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் திறனாகும். இது மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை உள்ளடக்கியது.
செழிப்பான மண், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது நீரை தக்க வைத்து வேர்களுக்கு காற்றோட்டத்தை அளிக்கிறது.
விவசாயத்துக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, மண் வளத்தை பாதுகாக்க முடியும். நீர்வளம் என்பது விவசாயத்துக்கு தேவையான நீரின் அளவு மற்றும் கிடைக்கும் தன்மையை குறிக்கிறது.
போதுமான நீர், பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு இன்றியமையாதது. மழைநீர் சேகரிப்பு, குளங்கள், கிணறுகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக, நீரை சேமிக்கலாம். சொட்டுநீர் பாசனம் போன்ற நவீன நீர்பாசன முறைகளை பயன்படுத்துவதன் வாயிலாக, நீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.
மண்வளம், நீர் வளம் இரண்டும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக, விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, பேசினார்.