/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதீத உரப் பயன்பாட்டால் பாதித்த மண்ணை மீட்கலாம்; வேளாண் பல்கலை விஞ்ஞானி ஆலோசனை
/
அதீத உரப் பயன்பாட்டால் பாதித்த மண்ணை மீட்கலாம்; வேளாண் பல்கலை விஞ்ஞானி ஆலோசனை
அதீத உரப் பயன்பாட்டால் பாதித்த மண்ணை மீட்கலாம்; வேளாண் பல்கலை விஞ்ஞானி ஆலோசனை
அதீத உரப் பயன்பாட்டால் பாதித்த மண்ணை மீட்கலாம்; வேளாண் பல்கலை விஞ்ஞானி ஆலோசனை
ADDED : ஏப் 17, 2025 11:39 PM

கோவை; மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்திருக்கிறது.
விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்தான் இதற்குக் காரணம். ரசாயன உரங்களின் அதிகபட்ச பயன்பாட்டால் குடிநீர் மட்டுமல்லாது மண் வளமும் மோசமடைகிறது.
இதுதொடர்பாக, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வியிடம் பேசினோம். அவர் கூறியதாவது:
ஒரு குறிப்பிட்ட பயிர் எந்த அளவுக்கு மண்ணில் இருந்து தனக்குத் தேவையான சத்துகளை எடுக்கும் என அளவு இருக்கிறது.
அதற்கு மேல் இடப்படும் எந்த உரமாக இருந்தாலும் அது மண்ணில்தான் எஞ்சும். பண விரயம் மட்டுமல்லாது, மண்ணும் கெடும். இதனால், மண்ணின் இயற்பியல், வேதியியல் தன்மைகள் மாறுபடுகின்றன.
வேளாண் பல்கலையில் மண் ஆய்வு செய்து தருகிறோம். பயிர்களுக்குத் தேவையான உரமேலாண்மையை சொல்லித் தருகிறோம். விலை குறைவாக இருக்கிறது என்பதாலோ, அல்லது அதிக உரமிட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என்ற புரிதலாலோ, பெரும்பாலான விவசாயிகள் அதிக உரத்தை இடுகின்றனர். இதனால், மண்ணின் கார அமிலத் தன்மை (பி.ஹெச்., அளவு) மாறுபடுகிறது.
இதனால், அந்த நிலம் களர் நிலமாகவோ, உவர் நிலமாகவோ மாறிவிடுகிறது. இதனை மாற்ற முடியும்.
அதற்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பி.ஹெச்., அளவைப் பொறுத்து, ஜிப்சம் அல்லது கால்சைட் ஆகிய கனிமங்களைப் பரிந்துரை செய்வோம். உதாரணம், பி.ஹெச்., அளவு 5 முதல் 5.5 வரை இருப்பின், ஹெக்டருக்கு 5 டன் கால்சைட் பரிந்துரை செய்வோம்.இதனால், ஓரிரு மாதங்களில் சரியாகும் எனக் கூறிவிட முடியாது. மண் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, இரண்டு ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

