/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட்டடம் கட்டும் முன் மண் பரிசோதனை அவசியம்'
/
'கட்டடம் கட்டும் முன் மண் பரிசோதனை அவசியம்'
ADDED : ஜன 13, 2024 01:23 AM
''காலி இடத்தில் புதிதாக கட்டப்படும் எந்த ஒரு கட்டுமானமாக இருந்தாலும், மண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது,'' என்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா)தலைவர் ரமேஷ் குமார்.
நாங்கள் குடியிருக்கும் வீட்டின் முதல் மாடியில், முதலில் இரண்டு அறைகள் இருந்தன. இப்போது மேலும் இரண்டு அறைகள்கட்டிக் கொண்டிருக்கிறோம். மேலே ரூப் கான்கிரீட் போடும்போது, பழைய கான்கிரீட் கம்பி தெரியும் வரை இடித்து, அதில் வெல்டிங் வைத்து, புதிய கான்கிரீட் போட்டுக் கொள்ளலாம் என மேஸ்திரி கூறுகிறார். இது சரியான முறையா?
--வீராசாமி, ஜோதிபுரம்.
அப்படி பழைய கான்கிரீட்டை உடைத்து, வெல்டிங் வைப்பதினால் கட்டடத்துக்கு அதிர்வு ஏற்படும். செலவும் சற்று அதிகமாகும். இரண்டையும் குறைக்கும் வகையில், தற்போது புதிய தொழில்நுட்பமாக 'ரீபாரிங்' முறை வந்துள்ளது.
இதன்படி, பழைய கான்கிரீட்டில் ட்ரில்லிங் செய்து, அதில் தரமான பேஸ்ட் வைத்து கம்பியை பொருத்தி கொடுத்து விடுவார்கள். அதில் நாம், புதிய கான்கிரீட் கம்பிகளை இணைத்து கான்கிரீட் போட்டுக் கொள்ளலாம். இது வெல்டிங் வைப்பதை விட, அதிக வலிமையை கொடுக்கும்.
நாங்கள் கட்டி வரும் புதிய வீட்டில், பயோ செப்டிக் டேங்க் அமைக்குமாறு நண்பர் கூறுகிறார். இதனால் என்ன பயன்?
- சையது, சிங்காநல்லூர்.
பயோ செப்டிக் டேங்க் அமைப்பதன் மூலம், கழிவு நீரில் குறிப்பிட்ட கால இடைவெளியில், நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்கள் சேர்ந்து, சுத்தமான நீராக மாற்றலாம். இந்த நீரை தாவரங்களுக்கு பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதுடன், நிலத்தடி நீர் மாசுபாட்டையும் தடுக்கிறது. இதை அமைக்க, குறைந்த அளவு இடம் இருந்தாலே போதும்.
நாங்கள் மூன்று மாடி வீடு கட்ட தீர்மானித்துள்ளோம். எங்களது பொறியாளர் அஸ்திவாரம் போடுவதற்கு முன்பு, மண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என கூறுகிறார். இது அவசியமா?
-தமிழ்ச்செல்வன் போத்தனூர்.
தங்களது பொறியாளர் கூறுவது மிகவும் சரி. காலி இடத்தில் புதிதாக கட்டப்படும் எந்த ஒரு கட்டுமானமாக இருந்தாலும், மண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் அந்த இடத்தில் உள்ள மண்ணின் உறுதித்தன்மையை ஆராய்ந்து, அவர்கள் கொடுக்கும் அறிக்கையை, நல்ல ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியரிடம் கொடுத்து, அவர்கள் கணக்கிட்டு கொடுக்கும் அஸ்திவாரத்தின் ஆழம், அகலம் மற்றும் அந்த கட்டடத்துக்கு அமைக்க வேண்டிய தூண்கள், பீம்களின் அளவுகள், அதற்கு பயன்படுத்த வேண்டிய இரும்பு கம்பிகளின் அளவுகள் ஆகியவற்றின் வரைபடத்தை பெற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி சரியாக கட்டடம் கட்டினால், அந்த கட்டடம் என்றும் உறுதியாக நிலைத்து நிற்கும்.
நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் புதிய வீட்டில், எறும்பு மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
-ரேணுகா, ரத்தினபுரி
புதிய வீடு கட்டும்போது, அஸ்திவார குழியில் கான்கிரீட் போடுவதற்கு முன்பு ஒரு முறையும், பேஸ்மென்டில் மண்ணை நிரப்பி, ப்ளோரிங் கான்கிரீட் போடும் முன்பு ஒரு முறையும், வீட்டின் வெளிப்புறம் தளம் போடுவதற்கு முன்பு ஒரு முறையும், சரியான கரையான் மற்றும் பூச்சி ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதன் மூலமாக, வீட்டிற்குள் எறும்புகள் மற்றும் கரையான் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
நாங்கள் ஒரு பழைய வீட்டை வாங்கி உள்ளோம். அந்த வீட்டின் வெளிப்புற சுவற்றில் சுண்ணாம்பு அடித்திருக்கிறார்கள். அதன் மீது பெயின்ட் அடிக்கலாமா?
-கோபால், தொண்டாமுத்தூர்.
சுண்ணாம்பு சுவற்றின் மீது பெயின்ட் ஒட்டாது. எனவே பழைய சுண்ணாம்பை நன்றாக தேய்த்து எடுத்து விட்டு, நீரை ஊற்றி கழுவி விட்டு, அதன் மீது வெளிப்புற சுவருக்கு அடிக்கும் பிரைமரை வாங்கி அடிக்க வேண்டும். பின், அதன் மீது பெயின்ட் அடித்துக் கொள்ளலாம்.