/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது குடிக்க பணம் கேட்ட மகன் கொலை; தந்தை கைது
/
மது குடிக்க பணம் கேட்ட மகன் கொலை; தந்தை கைது
ADDED : நவ 08, 2025 01:14 AM
போத்தனுார்: கோவை, மதுக்கரை மார்க்கெட் -- சுந்தராபுரம் சாலையில் அரசு பள்ளி அருகே, பாலு என்பவரின் வீட்டில் செல்ல துரை, 56 என்பவர் குடியிருந்து வருகிறார்.
ஆட்டோ டிரைவரான இவரது மகன் விக்னேஷ்குமார், 27, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். போதை பழக்கத்தால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
விக்னேஷ்குமார் அடிக்கடி, தனது தந்தை செல்லதுரைவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்பதுடன், மீண்டும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் விக்னேஷ்குமார் தந்தையுடன் தகராறு செய்தார். ஆத்திரமடைந்து செல்லதுரை மகனை தாக்கியுள்ளார்.
அப்போது அவரது மற்றொரு மகன் தினேஷ்குமார், சத்தம் கேட்டு உள்ளே செல்ல முயன்றபோது, கதவை திறக்க முடியவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது, தந்தை செல்லதுரை, விக்னேஷ்குமாரின் கழுத்தை வேஷ்டியால் இறுக்குவதை கண்டு சத்தமிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பின் செல்லதுரை வெளியே வந்துள்ளார். காயங்களுடன் கிடந்த விக்னேஷ்குமாரை பரிசோதித்த, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
தினேஷ்குமார், மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை மீட்டு, செல்லதுரையை கைது செய்தனர்.

