/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோரிடம் வாய் விட்டு பேசுங்கள்! அவர்களின் நோய்கள் பறந்து போகும்
/
முதியோரிடம் வாய் விட்டு பேசுங்கள்! அவர்களின் நோய்கள் பறந்து போகும்
முதியோரிடம் வாய் விட்டு பேசுங்கள்! அவர்களின் நோய்கள் பறந்து போகும்
முதியோரிடம் வாய் விட்டு பேசுங்கள்! அவர்களின் நோய்கள் பறந்து போகும்
ADDED : ஜன 25, 2025 11:04 PM
வயது 60 நெருங்கும் போதே, பலருக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டுவிடும். மொத்த குடும்பத்தையே கட்டுக்குள் வைத்திருந்தவர்கள், தற்போது, ஒவ்வொன்றுக்கும் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் நிலை.
தன் பிள்ளையாகவே இருந்தாலும், இந்த தடுமாற்றத்தை சந்திக்காமல் யாரும் இருக்க முடியாது. இந்த தடுமாற்றம், அவர்களுக்குள் கடும் மனஅழுத்தத்தை கொண்டு வரும்.
நம் வீட்டு முதியோர், இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டியதென்ன?
உளவியல் நிபுணர் பிரதீபா கூறியதாவது:
சின்னச்சின்ன செயல்பாடுகள், அவர்களுக்குள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். முதியோர் உள்ள வீடுகளில் கட்டாயம் ஒருவர், 10 -15 நிமிடம் அவர்களுடன் பேச வேண்டியது அவசியம்.
உதாரணமாக மகன், அலுவலக கதை ஏதாவது கூறலாம், மருமகள், பக்கத்துவீட்டு கதை அல்லது பிள்ளைகளின் சேட்டை பற்றி கூறலாம். பேரன், பேத்திகள் பள்ளி கதை என ஏதாவது பேச வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை, ஒரு தொகையை அவர்களின் செலவுக்கு கொடுத்துவிட வேண்டும். பல பிள்ளைகள், 'நான் எல்லாம் வாங்கித்தருகிறேன்; கையில் எதுக்கு காசு' என கேட்பதுண்டு. இது, முற்றிலும் தவறு. கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்பதும் கூடாது.
என்ன அவசரமாக இருந்தாலும், சாப்பிட்டீர்களா என கேட்க வேண்டும். வீட்டில் எடுக்கும் முக்கிய முடிவுகளை, ஒரு முறை அவர்களிடம் கேட்டு விடுவது சிறந்தது. நம்மை மதித்து பிள்ளை கேட்கிறான் என்பது, மனநிறைவை தரும்.
தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் மொபைல் போனில் பாடல் கேட்பது எப்படி, சமையல் குறிப்பு பார்ப்பது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்கு பழக முடியவில்லை என்றால், ரேடியோ இயக்க கற்றுக்கொடுங்கள்.
பேரன், பேத்திகள் முன் அடிக்கடி தாய், தந்தையின் பெருமை, அவர்கள் பட்ட கஷ்டத்தை அவர்கள் முன்னிலையில் பேசுங்கள். இது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், கர்வத்தையும் கொடுக்கும்.
மாதம் ஒரு முறை, பிடித்த பலகாரங்கள் வாங்கி கொடுப்பதும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பிடித்த கோவிலுக்கு அழைத்து செல்வதும் நல்லது. வீட்டின் அருகில் உள்ள கோவிலாக இருந்தாலும், நீங்கள் அழைத்து செல்வதுதான் அவர்களுக்கு முக்கியம்.
இதுபோன்று, சின்ன சின்ன விஷயங்களை தொடர்ந்து செய்தாலே, வீட்டில் உள்ள முதியோர் பலர் மன அழுத்தம், மனஇறுக்கம் இன்றி இயல்பாக இருப்பார்கள். அதனால் ஏற்படும் நோய்கள் அண்டவே அண்டாது.