/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 28, 2025 09:23 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அம்மனுக்கு வளையல் காப்பு அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மகாலட்சுமி ேஹாமம் நடந்தது.
கடைவீதி விஷ்ணு பஜனை கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், மாகாளியம்மன் கோவில்மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வரமிளகாய் யாகம் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் அம்மன் அவதரித்த நாளில் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. துர்க்கை அம்மன் சன்னதியில் கடந்த 22ம் தேதி மஹாஅருள் நிகும்பலாயாகம் மற்றும் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 9:00 மணிக்கு மகாலலிதா சுகஸ்கரநாமம் அர்ச்சனை, 10:30 மணிக்கு ேஹாமம், நிஹூம்பலா யாகமும் (வரமிளகாய் யாகம்) நடந்தது. மதியம், 12:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிேஷக ஆராதனையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. அதன்பின் அம்மனுக்கு, மஞ்சள், சந்தனம், குங்கும காப்பு அலங்காரம், வளையல் அலங்காரம், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.
ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலை உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ஆண்டாள் பிறந்த நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆண்டாள் நாச்சியார் சமேத ரங்கமன்னார் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை, மஹா தீபாராதனை நடந்தது.
மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோவிலில் குழந்தைகளுக்கு கன்னி பூஜையும் நடந்தது.
நேருவீதி, தளிரோடு காமாட்சி அம்மன், ராமசாமி நகர் அங்காளம்மன் கோவிலில், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு வளையல், மலர் உட்பட பல்வேறு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.