/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.9.90 கோடியில் விளையாட்டு திடல்
/
ரூ.9.90 கோடியில் விளையாட்டு திடல்
ADDED : ஜன 01, 2026 05:01 AM
கோவை: கவுண்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒரு ஏக்கரில் பிரத்யேக விளையாட்டு திடல் அமைக்க ரூ.9.90 கோடிக்கு மாநகராட்சி சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்து கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்துவரும் நகராக கோவை உள்ளது. இங்கு திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனர். ஆனால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு போதுமானதாக இல்லை.
இளம் வீரர்கள் மட்டுமின்றி, மூத்தோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் அபார திறமையை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மாநில, தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.
ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேக விளையாட்டு அம்சங்கள் இங்கு இல்லாதாதது அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினரும் பிரத்யேக விளையாட்டு திடல், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு, மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, மேற்கு மண்டலம், 33வது வார்டு கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாக, கவுண்டம்பாளையத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரத்யேக விளையாட்டு திடல் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதில், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் இதர உள்விளையாட்டு போட்டிகள் நடத்த ஏதுவாக, மர தளத்துடன்கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது.
வீரர்களுக்கென்று பிரத்யேக உடற்பயிற்சி கூடமும் இடம்பெறுகிறது. விளையாட்டு உபகரணங்களுக்கான இருப்பு அறை, பார்வையாளர்களுக்கான மாடம் அமைக்கப்படும். குண்டு எறிதல் போன்றவற்றுக்கு வெளி விளையாட்டு திடலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென, ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதி கிடைத்தவுடன், மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

