/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்கப் பாதையில் ஊற்று தண்ணீர்; மக்கள் அவதி
/
சுரங்கப் பாதையில் ஊற்று தண்ணீர்; மக்கள் அவதி
ADDED : பிப் 13, 2024 10:45 PM

மேட்டுப்பாளையம்;காரமடை ரயில்வே சுரங்கப்பாதையில், பல மாதங்களாக தேங்கியுள்ள மழை தண்ணீர் தற்போது ஊற்று தண்ணீராக மாறியுள்ளது. தண்ணீரை வெளியேற்றியும் ஊற்று தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மேட்டுப்பாளையம் சென்னை இடையே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் காரமடை வழியாக செல்லும் போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து காரமடை ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்கப்பாதையில், பல மாதங்களுக்கு முன் மழை தண்ணீர் தேங்கியது.
அதை காரமடை நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது. பின் மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து நகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற முயற்சித்தனர். மழை தண்ணீரை மோட்டார் பம்புகள் வாயிலாக அகற்றிய போதும், தொடர்ந்து தண்ணீர் வற்றாமல் மீண்டும் மீண்டும் ஊற்று எடுத்தது. தேங்கியுள்ள தண்ணீரில் பாசி படிந்துள்ளது. கழிவுகளும் அதில் வீசப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காரமடை நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த தண்ணீர், ஊற்று தண்ணீராக மாறியுள்ளது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளன என்றனர்.
காரமடை நகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் வனிதா கூறுகையில், 'சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீர் மோட்டார் வாயிலாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஊற்று தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருகிறது.
காரமடையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

