/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்; மாணவர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம்
/
அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்; மாணவர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம்
அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்; மாணவர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம்
அரசு பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்; மாணவர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம்
ADDED : ஜூலை 22, 2025 10:18 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி காம்பவுண்ட் சுவரை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்பதால், மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சி 11வது வார்டுக்குட்பட்ட பகுதியில், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 800 மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் மையமும் உள்ளது. பள்ளிக்கு பின்புறம் விளையாட்டு மைதானம் காம்பவுண்ட் சுவருடன் உள்ளது. இதனிடையே பள்ளியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி இந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி தேங்கி நிற்கிறது.
சுவரின் ஒரு பகுதி மழை பெய்த போது இடிந்து விழுந்தது. அதன் பின், கழிவுநீர் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயே வரும் நிலை ஏற்பட்டது. பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகம் என பலரும் இதுதொடர்பாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதன்பின், பள்ளி நிர்வாகம் காம்பவுண்ட் இடிந்த இடத்தில் மணல் மேடுகளை உருவாக்கி கழிவுநீர் வராமல் தடுத்தனர்.
இந்நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சாக்கடை வடிகால் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அந்த தண்ணீர் மீண்டும் பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி தான் தேங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து, அப்பள்ளியின் மேலாண்மை குழு செயலாளரும், முன்னாள் மாணவருமான ராஜகோபாலன் கூறுகையில்,''விளையாட்டு மைதானத்தில் கழிவு நீர் உள்ளே வருவதால், மாணவர்களால் விளையாட முடியவில்லை. கழிவுநீர் வெளியேற மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. உயர் அதிகாரிகள் இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை. கோவை மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அல்லது காம்பவுண்ட் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு உயிர் பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை தேவை,'' என்றார்.