/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி, உடுமலைக்கு ஆக.11, 12ல் ஸ்டாலின் வருகை
/
பொள்ளாச்சி, உடுமலைக்கு ஆக.11, 12ல் ஸ்டாலின் வருகை
ADDED : ஆக 07, 2025 03:10 AM
கோவை:ஆக. 11ம் தேதி கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், உடுமலை, பொள்ளாச்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில், உடுமலை, பொள்ளாச்சியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க, கோவை வருகிறார்.
சென்னையில் இருந்து, ஆக., 11 மாலை, 5:25 மணிக்கு விமானம் மூலம் கோவை வரும் அவர், மாலை, 6:50 மணிக்கு காரில் உடுமலை நரசிங்கபுரம் செல்கிறார். அங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, உடுமலையில் இரவு தங்குகிறார்.
மறுநாள், 12 காலை, 10:00 மணிக்கு, உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதியம், 12:00க்கு பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் காமராஜர், பழனிசாமி கவுண்டர், சி.சுப்ரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் சிலைகள், பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது, உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார். புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். பின், கோவை வரும் முதல்வர், விமான நிலையத்தில் உணவருந்தி விட்டு, விமானம் மூலம் சென்னை திரும்பிச் செல்கிறார்.
திருப்பூரில் புதிதாக கட்டியுள்ள பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா, கோவையில் 'மாஸ்டர் பிளான்' தொடர்பாக தொழில்துறையினரை சந்திக்கும் நிகழ்ச்சி, இம்முறை இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.