UPDATED : அக் 28, 2026 09:29 PM
ADDED : அக் 28, 2026 09:26 PM

பேரூர்: பச்சாபாளையத்தில், சிறுதுளி அமைப்பு மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.
சிறுதுளி அமைப்பு, கோவையில் உள்ள ரோட்டரி சங்கங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பசுமையான கோவையை உருவாக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் துவக்கமாக, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம், ஜெகநாதன் நகரில் உள்ள ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், 'ரோட்டரி யுனைட் வனம்' அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார், முதல் மரக்கன்றை நடவு செய்து துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
ரோட்டரி யுனைட் வனத்தில், 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கோவை மாவட்டத்தில் வேறு பகுதிகளில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை நிலங்களில் மீதமுள்ள 75 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.
இவ்விழாவில், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி கவர்னர் மாருதி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சத்யவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
