ADDED : நவ 07, 2026 03:22 PM

– எல். உமாசங்கர் –
திரையின் வெளிச்சம் அணையவே இல்லை. ஒவ்வொருவரின் கையிலும் ஒரு திரை, அந்தத் திரைக்குள் இன்னொருவரின் வெற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தில் ஒரு பதற்றம் எல்லோரையும் தொற்றிக்கொள்கிறது. ‘நாம் மட்டும் பின்னால் நின்றுவிட்டோமா’ என்ற பதற்றம். பலர் பணத்தைத் துரத்துகிறார்கள்; சிலர் புகழைத் துரத்துகிறார்கள்.
இந்தப் பதற்றத்திற்கான பதிலை, ஆயிரம் ஆண்டுகள் முன்பே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
பொருள் நில்லாது. நில்லாது நீங்கிவிடும். நிற்பது உள்ளத்தின் உறுதி ஒன்று தான். அந்த உறுதியில் இருந்துதான் இன்றைய இந்தியாவின் புதிய தொழில் கதைகள் தொடங்குகின்றன.
சில்லுக்குள் புரட்சி
நள்ளிரவைத் தாண்டிய நேரம். அந்த அறைக்குள் குளிரூட்டியின் சீரான முணுமுணுப்பைத் தவிர வேறு சத்தமில்லை. மேஜை மீது ஆறிப்போன காபிக் கோப்பைகள், கசங்கிய வரைபடங்கள். கணினித் திரையில் நீல வெளிச்சத்தில் ஆயிரக்கணக்கான நுண் பாதைகள் மின்னல் கீற்றுகளாய் ஓடிக்கொண்டிருந்தன.
ஒரு பட்டனை அழுத்தினால் கோடிக்கணக்கான வர்த்தகம் ஒரு வினாடியில் நடந்து முடியும் உலகம் இது. ஆனால் அந்தப் பட்டனுக்குப் பின்னால் இருக்கும் நகத்தினும் சிறிய சில்லை வடிவமைக்க மட்டும் ஏன் பல ஆண்டுகள் ஆக வேண்டும்? இதுதான் அவர்களை உறங்கவிடாமல் செய்த கேள்வி.
அவர்கள் தான் பிரகதீஷ் சுரேஷ் பாபுவும், லானன் ஜியாங்கும். சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த பிரகதீஷ், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு ‘Tattvam AI ’என்ற நிறுவனத்தை உருவாக்கினார். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு குறைக்கடத்திச் சில்லுகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம் தான் அவர்களது ஆயுதம். பல ஆண்டுகள் பிடிக்கும் வேலையைச் சில வாரங்களில் முடிக்க முடியும் என்ற அவர்களது சவாலுக்கு உலகம் கொடுத்த முதல் அங்கீகாரம், 17 லட்சம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி.
இது வெறும் முதலீடு அல்ல. ஒரு யோசனைக்கு உலகம் கொடுத்த நம்பிக்கை முத்திரை.
இங்கே கவனிக்க வேண்டியது சில்லு மட்டுமல்ல. ஒரு துறையில் நீண்ட காலமாகத் தீராமல் இருக்கும் ஒரு சலிப்பான வேலையைக் கண்டுபிடித்து, அதற்குத் தொழில்நுட்பத்தால் தீர்வு தருவது தான் தொழில். மருத்துவத்தில் நோயைக் கண்டறிவதாக இருக்கலாம், வேளாண்மையில் விளைச்சலைக் கணிப்பதாக இருக்கலாம். சிக்கல் எங்கே இருக்கிறதோ, சந்தை அங்கே இருக்கிறது.
உறங்கினாலும் வருமானம்
காலை 9:00 மணிக்குத் தொடங்கி மாலை 5:00 மணிக்கு முடியும் என்ற பழைய அட்டவணையை இந்தத் தலைமுறை கிழித்துவிட்டது. பிரச்னை வேலை செய்வதை நிறுத்துவது அல்ல, வேலையை தன்னைப் போலவே உறங்காமல் இருக்க வைப்பது.
அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
முதல் வழி, இருக்கும் பொருளை இயக்குவது. வீட்டில் பூட்டிக் கிடக்கும் ஓர் அறை, அலுவலகத்தில் துாசி படிந்து நிற்கும் கணினி, ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் பரணில் ஏறும் ஒலி அமைப்பு, வருடத்தில் இரண்டு நாள் மட்டுமே வெளியே வரும் படப்பிடிப்புக் கருவி. இவை பொருட்கள் அல்ல, பயன்படுத்தப்படாமல் உறங்கும் மூலதனம். இன்னொரு பக்கம் அவற்றை வாங்காமல் வாடகைக்கு எடுக்க நினைக்கும் பெரும் கூட்டம் இருக்கிறது. இந்த இடைவெளியில் ஒரு பாலம் கட்டினால், அந்தப் பாலமே வருமானம்.
இரண்டாவது வழி, இருக்கும் அறிவை இயக்குவது. கோவையில் ஒரு சமையல் கலைஞர் தன் பாட்டியின் கையேட்டை ஒரு காணொளிப் பாடமாகப் பதிவு செய்கிறார். சென்னையில் ஒரு மாணவன் இரவு முழுவதும் விழித்து வரைந்த வடிவத்தை இணையத்தில் ஏற்றுகிறான். இரண்டும் ஒருமுறை தரமாக உருவாக்கப்பட்டால் போதும். ஒருவர் கற்றுக்கொண்டிருக்கும் அதே வினாடியில், இன்னொருவர் அதை வாங்கிக்கொண்டிருக்கலாம்.
ஒவ்வொரு ரூபாய்க்குப் பின்னாலும் தன் ஒவ்வொரு மணி நேரத்தையும் செலவழிக்காமல், தன் உழைப்பைத் தன்னைத் தாண்டி இயங்க வைப்பது தான் இதன் அடிப்படை.
விதைக்கு நிதி துணை
யோசனை இருக்கிறது, திறனும் இருக்கிறது. ஆனால் பணம் இல்லையே என்ற கவலை தான் பலரைப் பின்னுக்கு இழுக்கிறது. அந்தத் தீப்பொறியை அணையாத நெருப்பாக மாற்றத்தான் விதை நிதி தேவைப்படுகிறது.
மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதித் திட்டம் இதற்காகவே உருவாக்கப்பட்டது. ஒரு யோசனையைச் சோதித்துப் பார்ப்பது, அதன் மாதிரி வடிவத்தை உருவாக்குவது போன்ற பணிகளுக்கு ரூ.20 லட்சம் வரை மானியம். அடுத்த கட்டமான சந்தை அறிமுகம், வணிகமயமாக்குதலுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் அல்லது மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் வழியாக நிதி. இதற்காக ரூ.945 கோடி நிதித் தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி நேரடியாகக் கைக்கு வராது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடைகாப்பகங்கள் வழியாகவே தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்திலும் கதவுகள் திறந்திருக்கின்றன. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் டான்சீட் திட்டத்தில், பொதுப் பிரிவுக்கு ரூ.10 லட்சம் வரையும், பசுமைத் தொழில்நுட்பம், ஊரகம், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரையும் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டும் ‘iTNT’ போன்ற மையங்களும் இருக்கின்றன.
நிதி மட்டும் போதாது, தன் யோசனை எந்தப் பிரச்னைக்குத் தீர்வு, அதற்கு யார் பணம் கொடுப்பார்கள் என்ற தெளிவும் தேவை. கனவுக்கும் செயலுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவது தான் இந்த இயந்திரத்தின் வேலை.
சிகரம் எட்டும் வாய்ப்பு
திருப்பூரின் ஒரு சந்தை நினைத்துப் பாருங்கள். ஒரு மாடியில் பனியன் கம்பெனி இயங்குகிறது. கீழே மெஷின்களின் சத்தம், மேலே ஒரு சிறிய அறை, மேஜையில் கணக்குப் புத்தகம், சுவரில் மாட்டிய ஆர்டர் சீட்டுகள். அந்த நிறுவனத்தை நடத்துபவருக்கு ஒரு கனவு இருக்கிறது, இன்னும் இரண்டு ஆட்டோமேடிக் மெஷின் வாங்க வேண்டும், வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு நேரடியாகச் சரக்கு அனுப்ப வேண்டும். கையில் இருப்பதோ வங்கியின் கடன் பத்திரம் மட்டும்.
இந்த இடத்தில் தான் பலர் நின்றுவிடுகிறார்கள். சிலர் மட்டும் இன்னொரு கதவைத் தட்டுகிறார்கள்.
தன் நிறுவனத்தின் ஒரு சிறு துண்டை ஊருக்குச் சொந்தமாக்குவது. என் உழைப்பில் நீங்களும் பங்குதாரர் என்று பொதுமக்களை அழைப்பது. இதற்குப் பெயர் தான் சிறு நிறுவனங்களுக்கான பொதுப் பங்கு வெளியீடு.
மும்பையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இதற்கென்றே தனித் தளங்கள் இருக்கின்றன. இது பெரிய கோபுரங்களுக்கான வாசல் அல்ல, சிறு தொழிற்சாலைகளுக்கான வாசல்.
இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் 2026 அக்டோபர் 14 ஆலோசனை அறிக்கை ஒரு சுவாரசியமான எண்ணைச் சொல்கிறது. 2026 ஜூலை 31 நிலவரப்படி, இதுவரை 1,496 சிறு நிறுவனங்கள் இந்த வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்கின்றன. அவர்கள் திரட்டிய தொகை சுமார் ரூ.40,222 கோடி. அதில் 365 நிறுவனங்கள் இன்று சிறு தளத்தில் இருந்து பெரிய முதன்மைத் தளத்திற்கே பயணம் செய்துவிட்டன.
இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒரு பனியன் கம்பெனியின் பெயர் பங்குச் சந்தைத் திரையில் ஒளிரும் காட்சி. ஆனால் அந்த வெளிச்சத்திற்குப் பின் ஒரு நிழலும் இருக்கிறது. பொதுமக்களின் பணத்தை வாங்கிய பிறகு, ஒவ்வொரு கணக்கும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். பட்டியலிடுதல் என்பது கொண்டாட்டம் அல்ல, அது ஒரு புதிய ஒப்பந்தம்.
கழிவிலும் வருமானம்
இவ்வளவு புரட்சிகளுக்கு நடுவில் நாம் மறந்தது நமக்குக் கீழே இருக்கும் நிலம். வளர்ச்சியைக் கட்டடங்களால் மட்டுமே அளக்க முடியுமா.
இந்தக் கேள்வி தான் இன்று ஒரு புதிய பொருளாதாரமாகியிருக்கிறது. துாய்மை இந்தியா, நமாமி கங்கை போன்றவை வெறும் அறிவிப்புகள் அல்ல, அவை புதிய தொழில்களுக்கான அழைப்பிதழ்கள். ஒரு நகரின் குப்பையில் மறுசுழற்சிக்கான மூலப்பொருளும், உரமும், புதிய பொருளுக்கான வாய்ப்பும் ஒளிந்திருக்கிறது.
திருப்பூரை எடுத்துக்கொண்டால், துணிக் கழிவுகள் ஒரு பெரும் சவால். அவற்றை மறுசுழற்சி செய்து புதிய பொருளாக்குவது, சாயக் கழிவுநீரைச் சுத்திகரிப்பது, பயன்படுத்திய நீரை மீண்டும் தொழிற்சாலைக்குப் பயன்படும் வகையில் மாற்றுவது எனப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த உரத்தைத் தயாரிக்கவும், பிளாஸ்டிக் கழிவில் இருந்து சாலை போடவும் இன்று அரசு மானியமும், தனிச் சந்தையும் உருவாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் இயற்கையைக் காப்பது நஷ்டக் கணக்கு என்றார்கள். இன்று அதுதான் லாபக் கணக்கு. லாபமும் பொறுப்பும் இப்போது எதிரெதிர் தண்டவாளங்கள் அல்ல, ஒரே வண்டியை இழுக்கும் இரட்டைக் குதிரைகள்.
நாளைய பெரிய நிறுவனத்தின் முதல் கணக்குப் புத்தகம், ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அல்ல, நாம் மூக்கைப் பொத்திக்கொண்டு கடக்கும் ஒரு குப்பைக் கிடங்கில் கூட எழுதப்படலாம்.
---காந்திபுரத்தில் ஒரு யோசனை
கோவை காந்திபுரத்தில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தினமும் மாலையில் உரிமையாளர் கணக்குப் புத்தகத்தை மூட மூன்று மணி நேரம் ஆகிறது. வெளியில் சென்ற ஊழியர்கள் கொண்டு வரும் பெட்ரோல் பில், தேநீர் பில், கைப்பையில் கசங்கிக் கிடக்கும் ரசீதுகள். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து எழுதி, மேலாளரிடம் கையெழுத்து வாங்கி, கணக்காளரிடம் கொடுப்பதற்குள் அன்றைய லாபத்தில் பாதி நேரமாகவே கரைந்துவிடுகிறது.
இந்தியாவில் லட்சக்கணக்கான சிறு கடைகளின் நிலை இதுதான். இந்தச் சின்ன சிக்கலைத் தீர்த்தாலே போதும், அதுவே ஒரு நல்ல தொழில். உதாரணத்துக்கு, பில்லை போட்டோ எடுத்ததும் அதுவே தானாக கணக்கில் ஏறிக்கொள்ளும், முதலாளி தன் போனிலேயே சரி என்று சொல்லிவிடலாம், கணக்காளர் தனியாக பைல் தேட வேண்டியதில்லை. இப்படி ஒரு சின்ன ‘ஆப்’ இருந்தால், அது மிச்சப்படுத்துவது பணத்தை அல்ல, தினமும் மூன்று மணி நேர உழைப்பை.
அடுத்த பெரிய தொழில்நுட்ப நிறுவனம் சிலிக்கான் வேலியில் இருந்து வர வேண்டியதில்லை, காந்திபுரத்தின் அந்த மூன்று மணி நேரத்தை மிச்சப்படுத்தும் யோசனையில் இருந்து கூட பிறக்கலாம்.
