/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில வாலிபால் போட்டி; மூலத்துறை அணி முதலிடம்
/
மாநில வாலிபால் போட்டி; மூலத்துறை அணி முதலிடம்
ADDED : ஜன 20, 2025 11:17 PM
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே மாநில அளவில் நடந்த, வாலிபால் போட்டியில் மூலத்துறை கைப்பந்து அணி முதலிடம் பெற்றது.
சிறுமுகையை அடுத்த இலுப்பபாளையத்தைச் சேர்ந்த பி.டி. பிரதர்ஸ் குழுவினர், முதல் முறையாக இலுப்பபாளையத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை நடத்தினர்.
இரண்டு நாட்கள் மின் ஒளியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
போட்டித் துவக்க நிகழ்ச்சியில் இலுப்பபாளையத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் வாலிபால் வீரர்களின் போட்டோக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு முன்னாள் வாலிபால் விளையாட்டு வீரர்களை கவுரவப்படுத்தி பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பி.டி., பிரதர்ஸ் கைப்பந்து குழுவின் தலைமை பயிற்சியாளர் பிரதீப் தலைமை வகித்தார். மேலாளர் திலகராஜ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பழனிசாமி, முருகேசன், சண்முகம் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் தொடர் முறையில் போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் வெள்ளக்கோவில் கடல் கிளப் அணி முதல் பரிசும், இருகூர் கைப்பந்து குழு இரண்டாம் பரிசினையும், மேற்கு மண்டல காவல்துறை அணி மூன்றாம் பரிசினையும், தடாகம் கைப்பந்து குழு நான்காம் பரிசினையும் பெற்றது.
ஆண்கள் பிரிவில் சிறுமுகையை அடுத்த மூலத்துறை கைப்பந்து குழு முதலிடம் பெற்றது. இலுப்பபாளையம் பி.டி., பிரதர்ஸ் அணி இரண்டாம் பரிசினையும், மேற்கு மண்டல காவல்துறை அணி மூன்றாம் பரிசினையும், தடாகம் கைப்பந்து குழு நான்காம் பரிசையும் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டன. இந்த விளையாட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

