/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச சைக்கிளை தரமாக வழங்க நடவடிக்கை
/
இலவச சைக்கிளை தரமாக வழங்க நடவடிக்கை
ADDED : டிச 11, 2025 06:43 AM
கோவை: மாவட்டத்தில் உள்ள, 155 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1 மாணவர்களுக்காக, ரூ. 8.56 கோடி மதிப்பீட்டில் 17,782 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, மாவட்டத்தில் 40 பள்ளிகள் மையங்களாக தேர்வு செய்யப்பட்டு, அங்கு வடமாநில தொழிலாளர்களை கொண்டு, உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதற்கட்டமாக வழங்கப்பட்ட பல வண்டிகளில் துருப்பிடித்த பாகங்கள், காற்றடைக்கும் வால்வு டியூப், பிரேக் நட்டு, போல்ட்டுகள் இல்லாமலும், சில சைக்கிள்களின் பாகங்கள் சரியாகப் பொருத்தப்படாமல் கழன்று விழும் நிலையிலும் இருந்ததால், மாணவர்கள் அதனை அருகிலுள்ள சைக்கிள் கடைகளுக்கு தள்ளிச் சென்று, தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்து எடுத்துச் சென்றனர். இதை சுட்டிக்காட்டி, நமது தினமலர் நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக, சைக்கிள்கள் வழங்க கொள்முதல் ஆணை பெற்ற நிறுவனத்தின் பணிகளை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சைக்கிள்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டதோடு, இனி வழங்கப்படும் சைக்கிள்கள் தரத்துடன் வழங்கப்பட வேண்டும் என்று, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

