/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வலுக்கும் கோரிக்கை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வலுக்கும் கோரிக்கை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வலுக்கும் கோரிக்கை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வலுக்கும் கோரிக்கை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 10:59 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் வழித்தடத்தில், மீட்டர்கேஜ் காலத்தில் இருந்த கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், போத்தனுார் மற்றும் கிணத்துக்கடவு ஆகியவை இரு முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. கோவை -- பொள்ளாச்சி - பழநி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு பயணியர் ரயில் இயக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், அகலப்பாதையாக்கிய பின் மீட்டர் கேஜ் காலத்தில் கோவை -- பொள்ளாச்சி இடையே இருந்த கோவில்பாளையம், செட்டிப்பாளையம் இரு ரயில்வே ஸ்டேஷன்களும் செயல்படவில்லை. பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2019ம் ஆண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அக்., 2ம் தேதி கிராம சபை கூட்டத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
கோவில்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி - போத்தனுார் இடையே, 40 கி.மீ., துாரத்தில் கிணத்துக்கடவு மட்டுமே ஒரே ஒரு இடைநிலை ஸ்டேஷனாக செயல்படுகிறது. பொள்ளாச்சி - பாலக்காடு வரை, 54 கி.மீ., துாரத்தில் ஆறு ஸ்டேஷன்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.ஆனால், பொள்ளாச்சி - போத்தனுார் பாதையில் கிணத்துக்கடவை தவிர எந்த ஸ்டேஷனும் திறக்காதது வேதனையளிக்கிறது.
பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு மிக அருகிலும், பொதுமக்களுக்கு எளிதாக அணுகக்கூடிய இடத்திலும் கோவில்பாளையம் ஸ்டேஷன் நிலம் அமைந்துள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவும் இருந்தது. தற்போது, நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் அதிகரித்துள்ளன.
கோவில்பாளையத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்காச்சோள செயலாக்க நிறுவனம் உள்ளது. அதற்காக பஞ்சாபிலிருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு சரக்கு போக்குவரத்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்களில், 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செயல்படுகின்றனர். கோவை, பொள்ளாச்சியில் இருந்து அதிகளவு பணியாளர்கள் பயணம் செய்கின்றனர்.
தற்போது, கோவை - பொள்ளாச்சி இடைய மூன்று ரயில்கள் இயங்குகின்றன. எதிர்காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில், கோவில்பாளையம் ஸ்டேஷன் மீண்டும் கட்டப்பட்டு குறைந்த பட்சம் ஒரு நிமிட நிறுத்தம் அளிக்கப்பட்டால் பயனளிக்கும்.
கோவில்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1.38 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இவர்கள், பெரும்பாலும் கோவை, பொள்ளாச்சிக்கு பயணிக்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். தற்போது, சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதனிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவில்பாளையம் ஸ்டேஷன் திறப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு திறக்க முழு முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.