/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி மார்க்கெட் ஆக மாற்ற கடுமையான எதிர்ப்பு! மாநகராட்சி கூட்டத்தில் 'காச் மூச்'
/
காய்கறி மார்க்கெட் ஆக மாற்ற கடுமையான எதிர்ப்பு! மாநகராட்சி கூட்டத்தில் 'காச் மூச்'
காய்கறி மார்க்கெட் ஆக மாற்ற கடுமையான எதிர்ப்பு! மாநகராட்சி கூட்டத்தில் 'காச் மூச்'
காய்கறி மார்க்கெட் ஆக மாற்ற கடுமையான எதிர்ப்பு! மாநகராட்சி கூட்டத்தில் 'காச் மூச்'
ADDED : டிச 31, 2024 06:51 AM

கோவை: பாதி கட்டி முடித்த, கோவை வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டை, காய்கறி மார்க்கெட்டாக மாற்றும் மாநகராட்சியின் தீர்மானத்துக்கு, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பஸ் ஸ்டாண்ட் குறித்து, முதல்வருக்கு சரியான தகவலை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை; காரணம் கேட்டால் மன்றத்தில் சரியான பதிலளிப்பதில்லை எனக்கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். சபை நடவடிக்கை துவங்கியதும், ஒன்று முதல், 130 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக, மேயர் அறிவித்தார். அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், பல்வேறு தீர்மானங்களுக்கு சந்தேகங்கள் கேட்டார். ஒவ்வொரு கேள்விக்கும் கமிஷனர் பதிலளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பிரபாகரன் பேசும்போது, ''வெள்ளலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில், 52.46 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதன் பயன்பாட்டை தற்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன,'' என கேட்டார்.
அதற்கு மேயரோ, கமிஷனரோ பதிலளிக்கவில்லை. பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அதே நேரம் ம.தி.மு.க., கவுன்சிலர் தர்மராஜ் பேசுவதற்கு நின்றிருந்தார்.
தர்மராஜை பார்த்து, 'நீங்கள் பேசுங்கள்' என, கமிஷனர் கூறியதால், கோபமடைந்த அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், ''எனக்கு பதில் அளிக்காமல், வேறொருவரை பேச சொல்கிறீர்களே,'' என கேட்டார்.
''நீங்கள் இருக்கையில் அமருங்கள்; அவர் பேசி முடித்ததும் பதில் சொல்கிறேன்,'' என, கமிஷனர் கூறினார்.
மேயர் ரங்கநாயகி குறுக்கிட்டு, ''ஒருவரே அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும்,'' என்றார்.
கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி எழுந்து, அ.தி.மு.க., கவுன்சிலர் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மீண்டும் பிரபாகரன் பேசுகையில், ''எதிர்க்கட்சி வரிசையில் மூன்று பேரே இருக்கிறோம்; நீங்கள், 97 பேர் இருக்கிறீர்கள். தீர்மானங்கள் தொடர்பான சந்தேகங்களை, நாங்கள் தானே கேட்க முடியும்,'' என, கேட்டார்.
மாற்றுவது எதற்காக?
மத்திய மண்டல தலைவர் மீனா, ''அ.தி.மு.க., ஆட்சியில் தீர்மானம் தொடர்பாக பேச வாய்ப்பே தரவில்லை. தி.மு.க., ஆட்சியில் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறோம்,'' என்றார்.
கமிஷனர் பதிலளிக்க முற்பட்ட ஒவ்வொரு சமயமும், தி.மு.க., கவுன்சிலர்கள் குறுக்கிட்டு, பேசிய வண்ணம் இருந்தனர். அதனால், பிரபாகரன் இருக்கையில் அமர்ந்தார்.
சில கவுன்சிலர்கள் பேசிய பின், மீண்டும் பிரபாகரன் பேசுகையில், ''தமிழக சட்டசபையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பதிலளிக்கையில், 'எல் அண்டு டி பை பாஸ் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்; அதனால், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பஸ் ஸ்டாண்ட் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என பதிலளித்தார். சட்டசபை அவைக்குறிப்பில் இவை இடம் பெற்றிருக்கிறது. இப்போது, பஸ் ஸ்டாண்ட் உபயோகத்தை ஏன் மாற்றுகிறீர்கள்,'' என, கேட்டார்.
கவுன்சிலர்கள் தர்ணா
கேள்விக்கு பதில் கிடைக்காததால், மேயர் இருக்கை முன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தி.மு.க., கவுன்சிலர்கள் சூழ்ந்து, 'இருக்கையில் அமருங்கள்; பதில் சொல்வார்கள்' என, சமாதானம் செய்து, அழைத்து வந்தனர். இப்பிரச்னையால், மன்றத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின், தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தபடி, மன்றத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மூவரும், வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, இரு கூட்டங்களுக்கு பிரபாகரனை 'சஸ்பெண்ட்' செய்வதாக அறிவித்த மேயர், தீர்மானமாக நிறைவேற்றினார். மண்டல தலைவர் கதிர்வேல் முன்மொழிய, மண்டல தலைவர் மீனா வழிமொழிந்தார்.
இத்தனை நடந்தும் கடைசி வரை, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டை மாற்றுவது ஏன் என்பதற்கான விளக்கத்தை, கமிஷனர் சொல்லவில்லை.