/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
ADDED : மே 15, 2025 11:43 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கற்பிக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வகம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியியல் நூலகம், மெதுவாக கற்போருக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசு பணிகளில் முன்னுரிமை, உயர் கல்விக்கு முன்னுரிமை, அரசு வழங்கும் இலவச புத்தகங்கள், எழுது பொருட்கள், சீருடைகள் உள்ளிட்ட வசதிகள் அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், தற்போது அரசு உயர்நிலைப் பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, 481 இதை தொடர்ந்து அதிகரிக்க செய்ய பல்வேறு நடவடிக்கைகள் பள்ளி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர, பூச்சியூர், ராவுத்துகொல்லனூர், ராக்கிபாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆரம்பப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து, 6ம் வகுப்பை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.