/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோண்டி போட்ட சாலையில் சறுக்கி விழும் மாணவர்கள்
/
தோண்டி போட்ட சாலையில் சறுக்கி விழும் மாணவர்கள்
ADDED : செப் 01, 2025 10:20 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில், தோண்டி போட்ட சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் சறுக்கி விழுகிறார்கள்.
சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள அண்ணா நகர், ஜீவா நகர் வழியாக, சத்தியமங்கலம் சாலை வரை உள்ள சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருந்தது. தார் சாலைப் போடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், தார் சாலை அமைக்க, 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது. ஆனால் சாலை தோண்டி போட்டு பல நாட்கள் ஆகியும் தார் சாலை போடவில்லை.
இதுகுறித்து ஜீவா நகர் மக்கள் கூறியதாவது:
இந்த சாலை வழியாக நான்கு பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் சைக்கிளில் சென்று வருகின்றனர். ஜல்லி கற்கள் நிறைந்துள்ளதால் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் சறுக்கி விழுகின்றனர். தார் சாலை அமைக்காமல், ஒப்பந்ததாரர் காலம் கடத்தி வருகிறார். இவ்வாறு மக்கள் கூறினர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறுகையில், 'தார் சாலை அமைக்க, பொக்லைனில் சாலையை தோண்டிய போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணிகள் நடந்ததால், உடனடியாக தார் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டது.
குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் சாலைக்கு தார் போட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.