திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுங்க!
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுங்க!
UPDATED : நவ 16, 2026 05:24 PM
ADDED : நவ 16, 2026 05:22 PM

பொள்ளாச்சி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், சப் – கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டி, பல ஆண்டுகளாக முருக பக்தர்கள் போராடி வருகின்றனர். கடந்த, 2025 டிச., மாதம், 2ம் தேதி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவை கடந்த தி.மு.க., அரசு உதாசீனப்படுத்தியதுடன், தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், நீதிமன்றத்தையும், முருக பக்தர்களையும் அவமதித்தது. மேலும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றே உத்தரவிட்டனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை அவமதித்து முருக பக்தர்களுக்கு கடந்த தி.மு.க., அரசு துரோகம் செய்தது. தற்போது புதிதாக அமைந்துள்ள அரசு தி.மு.க.,வின் பாதையில் செல்லாமல், முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
முதல்வர் விஜய், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து, பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான தீபத்துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
