/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
தமிழ்புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 11:01 PM

நமது நிருபர் குழு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவை புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அன்னுார்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அன்னூர், ஓதிமலை சாலையில் உள்ள பெரியம்மன் கோவிலில், மதியம், பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது. வெள்ளமடை துக்காராம் பஜனை குழுவினர் பாதயாத்திரையாக வந்து பஜனை நடத்தினர்.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கலச பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. கல்யாண சுப்பிரமணிய சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து குமரன் குன்று குழுவின் பஜனை நடந்தது. சுவாமி திருவிதியுலா நடைபெற்றது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து, அலங்கார பூஜை செய்தனர். பின்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மன் சுவாமியை வழிபட்டனர்.
வெயில் காலம் என்பதால், பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் நடந்து வரும் பாதையில், பச்சை நிற துணிகள் கட்டியுள்ளனர். நடைபாதையில், ஜன்னல் விரிப்புகள் விரித்துள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சென்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், குறிஞ்சிஸ்வரர் கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறிஞ்சிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பாளையம் நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள் கோவில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
சூலூர்
தமிழ் புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன், கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று காலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் இறைவனை தரிசித்து மனமுருக வேண்டினர். புத்தாண்டை ஒட்டி, புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
புத்தாண்டின் பலன்கள் விளக்கப்பட்டது.